“ஐதராபாத் என்கவுன்டர் என்பது குற்றவாளிகளுக்கு ஒரு எச்சரிக்கை” என்று பிரியங்கா ரெட்டியின் தங்கை கூறியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி, பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் இன்று அதிகாலை போலீசாரால் என்கவுன்டர் செய்யப்பட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் பெண்கள் போலீசாருக்கு நன்றி தெரிவிக்கும் வண்ணம் ஆராவாரம் செய்கின்றனர். காவலுக்கு நிற்கும் போலீசாரிடம், அருகில் வரும் பெண்கள் சலியூட் அடிப்பதுபோல், வணக்கம் வைத்துச் செல்கின்றனர். இதனால், தெலங்கானா போலீசாருக்கு பாராட்டுக்கள் குவிந்தவண்ணம் உள்ளன.

இந்நிலையில், தன் மகள் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 4 பேரும் என்கவுன்டர் செய்யப்பட்டது தொடர்பாக இன்று செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா ரெட்டியின் தந்தை, “ என் மகள் இறந்து 10 நாட்கள் ஆகிவிட்டது. இப்போது, குற்றவாளிகள் 4 பேரும் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளதால், என் மகளின் ஆத்மா சாந்தியடையும். தெலங்கானா அரசுக்கும், காவல்துறைக்கும் எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று கண் கலங்கியபடி பேசினார்.

இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரியங்கா ரெட்டியின் தங்கை, “குற்றவாளிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளது மூலம், என் அக்காவின் இறப்பிற்கு நீதி வழங்கப்பட்டுள்ளது. இனி இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கும், இது ஒரு எச்சரிக்கையாக இருக்கும்.

தெலங்கானா அரசும், காவல்துறை அதிகாரிகளும் எங்களுடன் இருந்தார்கள். நிறையப் பிரபலங்கள் எங்களுக்கு ஆறுதல் சொன்னார்கள். இந்த நேரத்தில், அவர்கள் அனைவருக்கும் நான் நன்றி தெரித்துக்கொள்கிறேன்” என்று உருக்கமாகக் கூறினார்.

இதனிடையே, பிரியங்கா ரெட்டி தங்கையின் பேட்டி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.