“US-இந்தியா ப்ரெண்ட்ஷேப் லாங் லிவ்” என்று பிரதமர் மோடி பேசியது முதல், “We love you india very much” என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியது வரை, முக்கிய அம்சங்களை தற்போது பார்க்கலாம்...

'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியானது உலகின் மிகப் பெரிய கிரிக்கெட் மைதானமான, சர்தார் வல்லபாய் பட்டேல் மைதானத்தில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வருகை தந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பிரதமர் மோடி ஆகிய இருவரும், மாஸ் எண்ட்ரி கொடுத்தனர். இருவரும் உள்ளே நுழையும் போது, இசை முழக்கங்கள் விண்ணை முட்டியது. அத்துடன், இந்திய மக்களின் ஆராவாரமான கைத்தட்டலும் விண்ணை முட்டும் அளவுக்கு எதிரொலித்தது.

இதனையடுத்து, இருநாட்டு தேசிய கீதங்கள் இசைக்க 'நமஸ்தே ட்ரம்ப்' நிகழ்ச்சி கோலாகலமாகத் தொடங்கியது.

பிரதமர் மோடி சூளுரை!

இதில் முதலில் பேசிய பிரதமர் மோடி, ‘நமஸ்தே ட்ரம்ப்’ என ஹிந்தியில் வரவேற்று

உரையைத் தொடங்கினார். அதிபர் ட்ரம்பை குடும்பத்துடன் வரவேற்பதில் ஒட்டுமொத்த இந்தியாவும் பெருமை கொள்வதாகக் கூறினார்.

பல மொழி பேசும் மக்களின் நாட்டிற்கு ட்ரம்ப் வருகை தந்துள்ளதை வரவேற்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்தார்.

இந்திய சுதந்திரப் போராட்டத்தில் குஜராத்தின் பங்கு முக்கியமானது என்று குறிப்பிட்ட பிதரமர் மோடி, மொடேராவில் வரலாறு படைக்கப்பட்டதாகவும் பெருமிதத்தோடு குறிப்பிட்டார்.

அமெரிக்காவில் உள்ள சுதந்திர தேவி சிலை போன்று, இந்தியாவில் சர்தார் வல்லபாய் படேல் சிலை திகழ்வதாகவும் மோடி புகழாரம் சூட்டினார்.

மேலும், இரு நாடுகளுக்கு இடையே புதிய நம்பிக்கை பிறந்திருப்பதாகவும், புதிய கதவுகள் திறக்கப்படும் என்றும் பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். இறுதியாக, “யூ.எஸ். - இந்தியா ப்ரெண்ட்ஷேப் லாங் லிவ்.. லாங் லிவ்” என்று கூறி, பிரதமர் மோடி தனது பேச்சை நிறைவு செய்தார்.

“நமஸ்தே” ஹிந்தியில் பேசிய ட்ரம்ப்!

இதனைத்தொடர்ந்து, மைதானத்தில் திரண்டிருந்த லட்சக்கணக்கான மக்கள் வெள்ளத்தின் நடுவே தோன்றி உரையாற்றிய ட்ரம்ப், “நமஸ்தே என ஹிந்தியில் பேசி தனது உரையைத் தொடங்கினார். மோடியால் குஜராத்திற்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த நாட்டுக்கே பெருமை” என்று புகழாரம் சூட்டினார்.

“பிரதமர் மோடி இந்தியாவுக்கு இரவு - பகலாக உழைக்கிறார் என்றும், உழைப்பிற்கு வாழும் உதாரணம் மோடி” என்றும் ட்ரம்ப் புகழாரம் சூட்டி மகிழ்ந்தார்.

குறிப்பாக, அன்று டீ விற்றவர் இன்று ஒரு நாட்டின் பிரதமராகத் திகழ்வது ஒன்றும் சாதரான விசயம் இல்லை என்று ட்ரம்ப் சொல்லிப் பெருமைப்பட்ட போது, உணர்ச்சியால் நெகிழ்ந்து இருக்கையிலிருந்து எழுந்த பிரதமர் மோடி, ட்ரம்ப்பின் அருகில் சென்று கை குலுக்கினார். அந்த தருணத்தில், மோடி தனது பரஸ்பர அன்பை, நன்றிக்குப் பதிலாகச் சிறு புன்னகையைத் தந்து வெளிப்படுத்தினார்.

தொடர்ந்து பேசிய ட்ரம்ப், “அமெரிக்க மக்கள் இந்தியாவைப் பெரிதும் நேசிக்கின்றனர். இந்த பிரம்மாண்ட வரவேற்புக்கு நன்றி” என்றும் தெரிவித்துக்கொண்டார்.

“வேறுபாடுகளைக் களைந்து அனைத்து மதத்தினரும் இந்தியாவில் ஒற்றுமையாக, உலகிற்கு முன்னுதாரணமாக வாழ்ந்து வருகின்றனர். இந்தியாவின் பிரமிக்கத்தக்க வளர்ச்சி, உலக நாடுகளுக்குச் சிறந்த முன்னுதாரணமாகத் திகழ்வதாகவும்” அதிபர் ட்ரம்ப் சுட்டிக்காட்டினார்.

“இன்று மகாத்மா காந்தியின் ஆசிரமத்திற்குச் சென்றதைப் பெருமையாகக் கருதுகிறேன். உலக காதல் சின்னமான தாஜ்மகாலை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். சச்சின் டெண்டுல்கர், விராட் கோலி போன்ற உலகின் சிறந்த கிரிக்கெட் வீரர்களை இந்தியா கொண்டுள்ளது” என்றும் இந்தியாவின் பெருமைகளை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அடுக்கிக்கொண்டே சென்றார்.

மேலும், “ராணுவ உபகரணங்களை இந்தியாவுக்கு வழங்க அமெரிக்கா தயாராக உள்ளதாகவும்,
பாதுகாப்புத் துறையில் இந்தியாவுடன் 21.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கு நாளை அமெரிக்கா ஒப்பந்தம் செய்ய உள்ளதாக” அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்தார்.

நிறைவாக, “We love you india very much” என்று கூறி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது உரையை நிறைவு செய்தார்.

இதனைத்தொடர்ந்து மீண்டும் பேசிய பிரதமர் மோடி, "இந்தியாவின் பெருமைகளை எடுத்துக்கூறியதற்கும் அமெரிக்க அதிபருக்கு நன்றி” என்று கூறினார்.

மேலும், " அதிபர் ட்ரம்பின் இந்திய வருகை, இரு நாடுகளுக்கும் இடையே புதிய நம்பிக்கையை உருவாக்கியுள்ளது என்றும், இது புதிய வாய்ப்புகளுக்கான கதவுகளைத் திறக்கும்” என்றும் பிரதமர் மோடி நம்பிக்கைத் தெரிவித்தார்.