முதுகுளத்தூர் அருகே போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட கல்லூரி மாணவர் உயிரிழந்த சம்பவத்தில், ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விளக்கம் அளித்துள்ளார்.

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ள நீர்கோழியேந்தலை சேர்ந்தவர் லட்சுமணகுமார். இவரது மகன் மணிகண்டன் (21). கல்லூரி மாணவர். நேற்று மாலை பரமக்குடி-கீழத்தூவல் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மணிகண்டன், தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தாமல் சென்றுள்ளார்.

இதையடுத்து அவரை விரட்டி சென்று பிடித்த போலீசார், காவல் நிலையத்திற்கு மணிகண்டனை அழைத்து சென்றுள்ளனர். பின்னர் மணிகண்டனின் இருசக்கர வாகனம் மற்றும் செல்ஃபோனை பறிமுதல் செய்த போலீசார், இதுகுறித்து அவரது தாயார் மற்றும் சகோதரருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

காவல்துறையினர் கொடுத்த தகவலை அடுத்து காவல்நிலையத்திற்கு வந்த இருவரும், மணிகண்டனை வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளனர். வீட்டிற்கு வந்த சிறிது நேரத்தில் மணிகண்டனுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உறவினர்கள் 108 ஆம்புலன்சை வரவழைத்துள்ளனர். அவர்கள் வந்து பரிசோதித்த போது, மணிகண்டன் இறந்து போனது தெரியவந்தது. இது குறித்து முதுகுளத்தூர் டிஎஸ்பியிடம், மணிகண்டனின் உறவினர்கள் புகார் அளித்தனர்.

டி.எஸ்.பி. உத்தரவின்பேரில் முதுகுளத்தூர் அரசு மருத்துவமனைக்கு மணிகண்டனின் உடல் பிரேத பரிசோதனைக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் போலீசார் தாக்கியதால்தான், மணிகண்டன் இறந்துள்ளார் என்று கூறி, அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் மாணவர் மணிகண்டன் மரணம் குறித்து #JusticeForManikandan என்ற ஹேஷ்டேக்கும் ட்ரண்ட் செய்யப்பட்டு வருகிறது.

இதனிடையே ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திக் விளக்கம் அளித்துள்ளார். அதில் மாணவர் மணிகண்டன் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தார் என்று சொல்லும் குற்றச்சாட்டில் உண்மையில்லை. அவருக்கு அறிவுரை சொல்லியே போலீசார் அனுப்பி வைத்துள்ளனர் என அவர் விளக்கம் அளித்துள்ளதுடன், விசாரணைக்கு அழைத்து வந்த மாணவன் மணிகண்டனை உறவினர்கள் வீட்டுக்கு அழைத்து சென்றதற்கான கடிதத்தையும் வெளியிட்டுள்ளார்.

அந்த கடிதத்தில் “நான் நீர் கோழியேந்தல் கிராமத்தில் குடியிருந்து வருகிறேன். நான் விவசாய வேலை செய்து பிழைத்து வருகிறேன். இன்று (04-12-21) ஆம் தேதி கீழ்த்தூவல் காவல் நிலையத்தில் எனது மகன் மணிகண்டன் விசாரணைக்காக இருந்தவரை இன்று இரவு நேரம் என்பதால் நாளை காலை 10 மணிக்கு தாங்கள் முன் தவறாமல் ஆஜர்படுத்துகிறேன்.

எனது மகன் மணிகண்டன் இன்று (04-12-21)ஆம் தேதி 20.00 மணிக்கு நானும் எனது உறவுக்காரர் குமரையா மகன் இராமலிங்கம் ஆகிய இருவரும் நல்ல நிலையில் அழைத்து செல்கிறோம்” என எழுத்தப்பட்டு அதில் மணிகண்டனின் தந்தை ராமலட்சுமணனின் கையொப்பமும் இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் “இராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர், மேலத்தூவல் கிராமத்தில் காவல்துறையினரின் விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்ட கல்லூரி மாணவர் மணிகண்டன் மர்மமான முறையில் உயிரிழந்தது குறித்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்துகிறேன்” என அ.ம.மு.க .பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் ட்வீட் செய்துள்ளார்.

இதுதொடர்பாக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை பதிவிட்ட ட்விட்டர் பதிவில், ‘ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியை சார்ந்த சகோதரர் மணிகண்டன் அவர்களுடைய மரணம் அதிர்ச்சி அளிக்கிறது. வாகன பரிசோதனையின் போது அழைத்துச் செல்லப்பட்ட சகோதரர் காவல்துறை துன்புறுத்தலால் இறந்திருக்கலாம் என்கின்ற குற்றச்சாட்டை மூடி மறைக்காமல் முழுமையாக விசாரணைக்கு உட்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தவறு எந்த மட்டத்தில் நடந்திருந்தாலும் கூட, உரிய தண்டனை அளிக்க வேண்டும். சகோதரரை இழந்து வாடும் அவருடைய குடும்பத்திற்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரது ஆன்மா சாந்தி அடையட்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.