டெல்லி கலவரத்தில் 5 பேர் உயிரிழந்த நிலையில், துப்பாக்கிச்சூடு நடத்தியவர் கைதாகி உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நேற்று இந்தியாவுக்கு வருகை தந்ததையொட்டி, சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்ட தீ, நேற்று மீண்டும் பற்றி எரிந்தது.

இதனால், சி.ஏ.ஏ.வுக்கு எதிராகத் தலைநகர் டெல்லியில் நேற்று பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சி.ஏ.ஏ.வுக்கு ஆதரவாகவும் சிலர் அந்த பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால், இரு தரப்புக்கும் இடையே கலவரம் வெடித்தது. இரு தரப்பினரும் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக் கொண்டனர். இதனையடுத்து, அங்கு விரைந்து வந்த போலீசார், போராட்டக்காரர்கள் மீது கண்ணீர் புகைக் குண்டை வீசினார். அத்துடன், தடியடி நடத்தியும் கூட்டத்தைக் கலைத்தனர்.

இதில், வன்முறையாளர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். அப்போது, மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், காவலர் ரத்தன்லால் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனைத்தொடர்ந்து நடைபெற்ற போராட்டத்தில், பொதுமக்கள் 4 பேர் என மொத்தம் 5 பேர் உயிரிழந்தனர். மேலும், இந்த கலவரத்தில் 105 பேர் காயம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

பின்னர், போராட்டக் களத்தில் கை துப்பாக்கியுடன் வலம் வந்த நபர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், 33 வயதான ஷாரூக் என்பவரைக் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.

குறிப்பாக, அவர் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது? என்றும், இந்த போராட்டக் களத்திற்கு அனுப்பி வைத்தது யார்? என்றும், பயங்கரவாத அமைப்புகளிடம் இவருக்குத் தொடர்பு இருக்கிறதா? என்ற கோணத்திலும் போலீசார், தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

டெல்லியில் மேலும் கலவரம் பரவாமல் இருக்க, போலீசார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இதனால், டெல்லியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதனிடையே, டெல்லியில் நிலவும் பதற்றமான சூழல் குறித்து ஆலோசனை நடத்த, அவசர கூட்டத்திற்குத் துணை ஆளுநர் அனில் பைஜால், டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களுக்கு அமித்ஷா அழைப்பு விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.