டெல்லியில் ஆட்சியமைக்கத் தேவையான 36 இடங்களை விட ஆம் ஆத்மி கட்சி அதிக இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது..|

மொத்தம் 70 தொகுதிகளைக் கொண்ட டெல்லி சட்டமன்றத்திற்குக் கடந்த 8 ஆம் தேதி விறுவிறுப்பாகத் தேர்தல் நடைபெற்றது.

இதில், ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் கட்சிகளிடையே, மும்முனைப் போட்டி ஏற்பட்டது. இந்த தேர்தலில், மொத்தம் 62.59 சதவீத வாக்குகள் பதிவானது.

இதனிடையே, இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணும் பணி தொடங்கியது. அதன்படி, காலை முதலே, ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.

டெல்லி தேர்தலில் தற்போதைய நிலவரப்படி ஆம் ஆத்மி 52.01 சதவீதமும், பாஜக 40.02 சதவீதமும், காங்கிரஸ் 4.45 சதவீதமும் வாக்குகளைப் பெற்று வருகின்றன.

குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி 52 இடங்களில் முன்னிலைப் பெற்றுள்ளன. பாஜக 18 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன. ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு இடங்களில் கூட முன்னிலையில் இல்லை.

அதே நேரத்தில் ஆம் ஆத்மி கட்சி 22 தொகுதிகளிலும், பாஜக 14 தொகுதிகளிலும் முன்னிலையில் இருப்பதாக தேர்தல் ஆணைய இணையதளத்தில் தகவல் வெளியாகி உள்ளன.

கிழக்கு டெல்லியின் 10 தொகுதிகளில் 8 தொகுதியில் ஆம் ஆத்மி முன்னிலையில் உள்ளன. 2 தொகுதியில் மட்டும் பாஜக முன்னிலையில் உள்ளன.

அதேபோல், டெல்லி சாந்தினி சவுக்ன் 10 தொகுதிகளில், 9 ல் ஆம் ஆத்மி முன்னிலை வகிக்கின்றன. புது டெல்லி தொகுதியில் அரவிந்த் கெஜ்ரிவால் முன்னிலை பெற்று வருகிறார். பட்பர்கஞ்ச் தொகுதியில் போட்டியிட்ட மணீஷ் சிசோடியா முன்னிலை பெற்று வருகிறார்.

ஆனால், ஆம் ஆத்மியில் இருந்து காங்கிரஸ் கட்சிக்கு சென்ற அல்கா லம்பா சாந்தினி, பின்னடைவு பெற்று வருகிறார். அதேபோல், ஆம் ஆத்மியில் இருந்து பாஜகவுக்கு சென்று போட்டியிட்ட கபில் மிஸ்ராவும், பின்னடைவை சந்தித்து வருகிறார்.

இதனிடையே, டெல்லி சட்டப்பேரவை தொகுதியில் ஆம் ஆத்மி கட்சி தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால், ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் தொண்டர்கள் உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.