பல்வேறு மாநிலங்களில் மதுபானக்கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில், கொலை உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரொனா வைரஸ் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் முதலில் 21 நாட்களும், அதன்பிறகு மொத்தம் 40 நாட்கள் என பொது ஊரடங்கு அமலில் இருந்தது.

ஊரடங்கால், நிறுவனங்கள் முதல் டாஸ்மாக் கடைகள் வரை அனைத்தும் மூடப்பட்டது. இதனால், பொதுமக்கள் வீட்டிலேயே முடங்கி இருக்கும் சூழல் ஏற்பட்டது.

இதன் காரணமாக, நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் முற்றிலுமாக குறைந்ததாக, மத்திய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்து இருந்தது.

இதனிடையே, கடந்த 4 ஆம் தேதி முதல் நாடு முழுவதும் மேலும் 2 வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.

இதனால், டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட முதல் நாளே, போதையால் அதிக அளவிலான குற்றங்கள் நடைபெற்றதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இந்நிலையில், பல்வேறு மாநிலங்களில் மதுக்கடைகள் திறக்கப்பட்ட ஒரே நாளில் மோதல், கொலை என குற்றச்சம்பவங்கள் அரங்கேறத் தொடங்கியுள்ளன.

குறிப்பாக, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மதுக்கடைகள் திறக்கப்படுவதையொட்டி, நண்பர்கள் சிலர் நடத்திய மதுவிருந்ததில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில், ஒரு இளைஞர் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.

இதேபோல், அங்குள்ள ஜீவன் பிமா நகர் பகுதியில் ஒருவர் தனது நண்பராலேயே போதையில் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். அந்த பகுதியில் உள்ள சிக்கபல்லபுரா மாவட்டம் சித்லகட்டா கிராமத்திற்கு கொரோனா பரிசோதனைக்குச் சென்ற ரவணம்மா என்ற சுகாதாரப் பணியாளரை, அங்கு மதுபோதையில் இருந்த ஒருவர் அடித்து கடுமையாகக் காயப்படுத்தி உள்ளார்.

இந்தியாவில், மதுக்கடைத் திறப்பால் இதுபோன்ற குற்ற சம்பவங்கள் மீண்டும் அரங்கேறத் தொடங்கியுள்ளது பொதுமக்கள் மத்தியில், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மதுவால் ஏற்படும் இதுபோன்ற குற்ற சம்பவங்கள், சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் நடவடிக்கை என்று சமூக ஆர்வலர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே, மதுக்கடைகள் திறப்பை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ள நிலையில், கொரோனாவால் அமலுக்கு வந்த தற்காலிக மதுவிலக்கை, நிரந்தரமாக்க வேண்டும் என்றும் பலரும் தொடர்ந்து வலியுறுத்தத் தொடங்கி உள்ளனர்.