இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரவீன்குமார் தற்கொலைக்கு முயன்றுள்ள சம்பவம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மன அழுத்தம் யாருக்கும் வரலாம் என்பதற்குச் சாட்சி கூறுகிறது இந்த செய்தி. புகழின் உச்சத்தில் கொடி கட்டி பறந்தவருக்கு தான், தற்போது இப்படியொரு மோசமான நிலை. இதில், நாமெல்லாம் எம்மாத்திரம்?



ஆஸ்திரேலியா வீரர் மேக்ஸ்வெல், மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளதாகக் கடந்த சில மாதங்களுக்கு முன்பு செய்திகள் வெளியானது.

இந்நிலையில், இந்தியாவைச் சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் பிரவீன்குமாரும், மிகுந்த மன அழுத்தத்துக்கு ஆளாகி உள்ளதாக வெளிப்படையாகவே அவர் தெரிவித்துள்ளார். இது, கிரிக்கெட் உலகில் பீதியையும், கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பிரவீன்குமார், தனது அசாத்திய பந்து வீச்சால், கடந்த 2007 ஆம் ஆண்டு, இந்திய கிரிக்கெட் அணியில் அறிமுகம் ஆனார்.

மிகத் துல்லியமான ஸ்விங் பந்துவீச்சால், எதிர் அணியைத் திணறடித்து, தோனி தலைமையிலான இந்திய அணியில் நிரந்தரமாக இடம் பிடித்தார்.

பின்னர், சர்ச்சையில் சிக்கிய இவர், கடந்த 2014 ஆம் ஆண்டு முதல், இந்திய அணியில் இடம் பெற முடியாமல் தடுமாறினார். இதனால், தன்னை தனிமைப்படுத்திக்கொண்ட அவர், தனது கடந்த கால விளையாட்டுகளை, தன்னந்தனியாக தினமும் பார்க்கத் தொடங்கினார்.

ஒரு கட்டத்தில் வாழ்க்கையை வெறுத்துப்போன அவர், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தார். அப்போது, தற்கொலை செய்துகொள்ளத் துணிந்து முடிவெடுத்தபோது, தனது பிள்ளைகள் அநாதைகளாக மாறிவிடுவார்கள் என்ற பயத்தில், அந்த முடிவைக் கைவிட்டு, மன நல மருத்துவரை அணுகி, சிகிச்சை பெற்று, திரும்பி உள்ளார்.

தற்போது, உத்தரப்பிரதேச ரஞ்சி கிரிக்கெட் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராகச் செயல்பட, கிரிக்கெட் வாரியத்தில் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, கிரிக்கெட் உலகில் பிரவீன்குமார் விவகாரமே தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.