7 வயது சிறுமி வன்கொடுமை வழக்கில் குற்றவாளிக்குத் தூக்குதண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கோவையில் கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி தன் வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்த 7 வயது சிறுமியை, அப்பகுதியைச் சேர்ந்த சந்தோஷ்குமார் தூக்கிச் சென்று கை, கால்களைக் கட்டி வெறித்தீர பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

பின்னர், சிறுமியின் கழுத்தை நெறித்து, அவர் கொடூரமாகக் கொலை செய்துவிட்டு, அப்பகுதியில் உள்ள புதரில் சிறுமியின் உடலை வீசிவிட்டுச் சென்றுவிட்டார்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், விசாரணை மேற்கொண்டு, போக்சோ சட்டத்தின் கீழ் சந்தோஷ்குமாரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

கோவை நீதிமன்றத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அனைத்து தரப்பு சாட்சிகளும் விசாரிக்கப்பட்ட நிலையில், இன்று காலை சந்தோஷ்குமாரை குற்றவாளி என்று நீதிமன்றம் அதிரடியாக அறிவித்தது.

இதனையடுத்து, பிற்பகல் 3 மணிக்குப் பிறகு தண்டனை விபரங்கள் அறிவிக்கப்படும் என்ற நீதிமன்றம் கூறியிருந்தது.

இந்நிலையில், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, இந்த வழக்கில் தண்டனை விபரங்களை நீதிபதி அறிவித்தார்.

அதன்படி, 7 வயது சிறுமியை கை, கால்களைக் கட்டி, பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்த குற்றத்திற்காக, சந்தோஷ்குமாருக்கு தூக்குதண்டனை வழங்கி நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்தார்.

மேலும், சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், சந்தோஷை தவிர்த்து, மற்றொரு நபரின் டி.என்.ஏ.வும் கலந்திருப்பதாகத் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக சிறுமியின் தாயார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இதனால், இந்த வழக்கில் தொடர்புடைய 2 வது நபரும் விரைவில் கைது செய்யப்பட்டு, அவருக்கும் தூக்குதண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.