தமிழகத்தில் 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், பலி எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களில் மேலும் 30 பேர் தற்போது குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஆனாலும், சென்னை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா என்னும் கொடிய வைரஸ் சற்று வேகமாகவே பரவி வருகிறது.

தமிழகத்திலிருந்து வாரணாசிக்கு யாத்திரை சென்ற 126 பேர் ஊரடங்கால் திரும்பி வர இயலாமல் சிக்கி தவித்த நிலையில், 126 பேரும் 3 பேருந்துகள் மூலம் திருவள்ளூருக்கு கொண்டுவரப்பட்டு, கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 65 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த பகுதிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, சீனாவிலிருந்து முதல் கட்டமாக 24,000 ரேபிட் பரிசோதனை கருவிகள் சென்னை வந்தடைந்தன. இன்று மாலை தமிழகத்தின் அனைத்து பகுதிகளுக்கும் அவை பிரித்து அனுப்பப்படும் என்றும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழகத்தில் கொரோனா பாதிப்புக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று மட்டும் 62 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். இதனால், கொரோனா பாதிப்பிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியோரின் எண்ணிக்கை தற்போது 180 ஆக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்தமாகத் தமிழகத்தில் இதுவரை 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் 144 தடை உத்தரவை மீறியதாக இதுவரை 2,18,533 பேர் கைது செய்யப்பட்டு, ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 2,05,054 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேபோல், தமிழகத்தில் ஊரடங்கை மீறியதாக 1.85 லட்சம் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், தற்போது வரை ரூ.98.07 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டுள்ளதாகவும் தமிழகக் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரமலான் மாதத்திற்கான சிறப்புத் தொழுகையை வீட்டிலேயே நடத்த வேண்டும் என்று, அரசு தலைமை காஜி தெரிவித்துள்ளார்.