இந்தியாவில் 13,664 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக, இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு 2 வது முறையாக நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே வருகிறது.

இந்தியாவில் மகாராஷ்டிரா, டெல்லி, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் கொரோனா வைரஸ் பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தியாவிலேயே அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3205 பேருக்கு கொரோனா வைரஸ் பரவி உள்ளது. அதேபோல், கொரோனாவுக்கு அந்த மாநிலத்தில் இதுவரை 194 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 300 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

டெல்லியில் மொத்தம் 1640 பேருக்கு கொரோனா பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. டெல்லியில் இதுவரை கொரோனாவால் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில், 1267 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள நிலையில், இதுவரை 15 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகம் முழுவதும் சுமார் 180 பேர் சிகிச்சையிலிருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

ராஜஸ்தானில் 1131 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 164 பேர் குணமாகி வீடு திரும்பி உள்ளனர்.

மத்தியப் பிரதேசத்தில் 4 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் உள்பட, அம்மாநில சுகாதாரத்துறையில் பணியாற்றும் 89 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், மத்தியப் பிரதேசத்தில் கொரோனாவுக்கு 1120 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 53 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 23 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1,007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல்,இதுவரை கொரோனா பாதிப்பிலிருந்து 1,749 பேர் குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

ஒட்டுமொத்தமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை தற்போது 13,664 ஆக உயர்ந்துள்ளது. அதே போல், நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 450 அக அதிகரித்துள்ளது.

இதனிடையே, இந்திய மக்களின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் என்பதால், வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களைத் தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க இயலாது என்று, மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.