இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,421 ஆக அதிகரித்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 114 ஆக உயர்ந்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்த அதிகரித்த வண்ணம் உள்ளன. இதனால், நாடு முழுவதும் ஊரடங்கைக் கடுமையாகக் கடைப்பிடிக்க மத்திய அரச உத்தரவிட்டுள்ளது.

மகாராஷ்டிராவில் ஒரே மருத்துவமனையில் பணியாற்றிய சுமார் 40 செவிலியர்கள் உட்பட சுமார் 50 க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்த மருத்துவமனை இழுத்து மூடப்பட்டது.

திரிபுராவில் முதல் கொரோனா பாதிப்பு தற்போது கண்டறியப்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் பாதிப்பு ஏற்படாமல் இருந்த நிலையில், அங்குள்ள உதய்ப்பூரிலிருந்து வந்த நபருக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக, அம்மாநில முதலமைச்சர் பிப்லாப் குமார் தெரிவித்துள்ளார்.

கேரளாவில், எந்தவித அறிகுறிகளும் இல்லாமல் 19 நாட்களுக்குப் பின்னர் மாணவி ஒருவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 325 ஆக உயர்ந்துள்ளது. இன்று புதிதாக 24 பேர் அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குறிப்பாக, நாடு முழுவதும் 25 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்டவர்கள், தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதாரத்துறை கூறியுள்ளது.

இதனால், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 4,281 லிருந்து, தற்போது 4,421 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 111 லிருந்து தற்போது 114 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை இந்தியா முழுவதும் கொரோனா பாதிக்கப்பட்டுக் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 326 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், இந்தியாவில் கொரோனா வைரசால் பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த 4 நாளில் இரு மடங்காக உயர்ந்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது.

இதனிடையே, ஏப்ரல் 15 ஆம் தேதியிலிருந்து உள்நாட்டு விமான சேவை முன்பதிவு தொடங்க உள்ளதாக GO AIR நிறுவனம் அறிவித்துள்ளது. அதே நேரத்தில், ஊரடங்கு உத்தரவு வரும் 14 ஆம் தேதியுடன் முடியும் நிலையில், அதை மேலும் நீட்டிக்க வேண்டும் என பிரதமர் மோடியிடம் தெலங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்நிலையில், நாடு முழுவதும் ஊரடங்கை நீட்டிக்கவோ, முடித்துக் கொள்வது பற்றியோ எந்த முடிவும் எடுக்கப்படவில்லை என்ற மத்திய அமைச்சர் நரேந்திர சிங் தோமர் தெரிவித்துள்ளார்.