இந்தியாவில் தீவிரமடையும் கொரோனா வைரசால், டெல்லியில் உள்ள அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் வரும் 31 ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கொரானா சந்தேகத்தின் பேரில் 28 ஆயிரத்து 529 பேர் கண்காணிக்கப்பட்டு வருவதாக மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ வர்தன் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று 28 ஆக இருந்த நிலையில், தற்போது 30 ஆக உயர்ந்துள்ளது.

உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் ஒருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், குர்கானை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் ஊழியர் ஒருவருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் பரவ தொடங்கி உள்ள கொரோனா பாதிப்பு எதிரொலியாக, டெல்லியில் அனைத்து ஆரம்ப பள்ளிகளுக்கும் நாளை முதல் மார்ச் 31 வரை விடுமுறை அறிவித்து, துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா உத்தரவிட்டுள்ளார்.

மேலும், கொரோனா பாதிப்பு எதிரொலியாக அரசு ஊழியர்கள் பயோமெட்ரிக் முறையில் வருகை பதிவு செய்ய தற்காலிக தடை விதித்தது, டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் டெல்லியில் நடைபெற இருந்த ஆசியன் பாதுகாப்பு மாநாடு ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

அத்துடன், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கடிதம் அனுப்பி உள்ளார்.

அதில், “அரசு மற்றும் தனியார் மருத்துவமனை மருத்துவர்களுடன் கலந்து ஆலோசித்து, கொரோனா அறிகுறி இருப்பவர்களுக்கு உரிய மருத்துவ அறிவுரைகள், பரிசோதனைகளை உரிய முறையில் மேற்கொள்ள வேண்டும்” என்று வலியுறுத்தி உள்ளார்.

“கொரோனா வைரஸ் தீவிரம், அதைத் தடுக்கும் வழிமுறைகளையும் கவனம் செலுத்த வேண்டும்” என்றும் கூறியுள்ளார்.

முக்கியமாக, “மாவட்ட தலைநகரங்களில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் தனியார் மருத்துவமனைகளில், கொரோனா வைரஸ் சிகிச்சைக்கு என்று தனியாக வார்டு ஏற்படுத்த வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தி உள்ளார்.

மேலும், கொரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பாகத் தமிழக அரசின் சுகாதாரத்துறை சார்பில், 24 மணிநேரமும் செயல்படக்கூடிய அவசர எண்கள் வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், நாகை மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் கொரோனா வார்டு அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 044-29510400, 044-29510500, 9444340496, 8754448477 ஆகிய எண்கள் அவசர எண்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, கொரோனா வைரஸ் அச்சத்தால் தனது முகத்தை ஒருவார காலமாகத் தொடவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.