சென்னையில் கொரோனாவுக்கு இதுவரை 2,007 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தடுப்பு பணிக்காக முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 347.76 கோடி ரூபாய் நன்கொடை வந்துள்ளதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதனிடையே, சென்னை கே.கே.நகர் மின்வாரிய அலுவலகத்தில் மேலும் 12 பேருக்கு கொரோனா இருப்பது இன்று உறுதியாகியுள்ளது.

சென்னை டிஜிபி அலுவலக காவல் தொழில்நுட்ப பிரிவில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

சென்னை சூளைமேடு காவல் நிலைய உதவி ஆய்வாளருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் இன்று ஒரே நாளில் 13 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அத்துடன், இதுவரை ஒட்டுமொத்தமாக சென்னையில் 54 காவலர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சென்னை சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சென்னை அசோக் நகர் 11 வது தெருவில் கோயம்பேடு சந்தை சார்ந்து செயல்பட்ட, மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், சென்னை வேளச்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, அவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். இதனால், அவர்கள் குடியிருந்த தெரு முழுவதும் தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை சவுக்கார்பேட்டை அண்ணா பிள்ளை தெருவில் அம்மா உணவக ஊழியர்கள் 2 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 60 க்கும் மேற்பட்டோருக்கு, கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக, தமிழக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

மாதவரம் பால் பண்ணை ஊழியர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்தமாகச் சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,007 ஆக உயர்ந்துள்ள நிலையில், இதுவரை 20 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனிடையே, கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்ததாகக் கூறி வதந்தி பரப்பியதாக சென்னையை சேர்ந்த சித்த மருத்துவர் திருத்தணிக்காசலத்தை, மத்திய குற்றப்பிரிவு போலீசார், இன்று அதிரடியாக கைது செய்தனர். அவர் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.