கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு மற்றும் குடிநீர் திட்டப்பணிகள் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடனும் முதல்வர் பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, ““ தமிழகத்தில் நாள்தோறும் 13 ஆயிரம் கொரோனா பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக” குறிப்பிட்டார்.

“கொரோனா தடுப்பு பணியில் நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளதாகப் பெருமிதம்” தெரிவித்த முதலமைச்சர் பழனிசாமி, “இந்தியாவிலேயே அதிக கொரோனா பரிசோதனை செய்த மாநிலம் தமிழகம்தான்” என்றும் சுட்டிக்காட்டினார்.

“கோடை காலத்தில் தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருவதாகவும், புறநகர் பகுதிகளில் சிறு குறு தொழில்கள் இயங்கத் தொடங்கியுள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

மேலும், “மருத்துவக் குழு ஆலோசனையின் படி கொரோனாவை தடுக்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், பொது மக்கள் வெளியே சென்றால் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும்” என்றும், அவர் வலியுறுத்தினார்.

“அரசின் நடவடிக்கையால் தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுக்குள் இருப்பதாக” குறிப்பிட்ட முதலமைச்சர், “கொரோனா பாதிப்பு தமிழகத்தில் சமூக பரவலாக இல்லை” என்றும் உறுதிப்படத் தெரிவித்தார்.

குறிப்பாக, “தமிழக அரசின் வழிமுறைகளை மாவட்ட நிர்வாகம் பின்பற்றியதால், கொரோனா இல்லாத மாவட்டமாக சேலம் மாறியுள்ளது” என்றும் முதலமைச்சர் பழனிசாமி புகழாரம் சூட்டினார்.

“தமிழக அரசுக்கு 35,000 கோடி ரூபாய் ஜிஎஸ்டி வருவாய் இழப்பு ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளதாகவும், சிக்கன நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மூலம் வருவாய் இழப்பை சரிக்கட்ட முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் கூறினார்.

அத்துடன், “விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் தொடர்ந்து கிடைக்கத் தமிழக அரசு துணை நிற்கும்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.

அதேபோல், “பட்டியலினத்தவர்களை விமர்சனம் செய்ததால்தான் புகார் அடிப்படையில் ஆர்.எஸ் பாரதி கைது செய்யப்பட்டார் என்றும், தலைப்புச் செய்திக்காகவே ஸ்டாலின் அறிக்கை வெளியிடுகிறார்” என்றும் முதலமைச்சர் பழனிசாமி விளக்கம் அளித்து, குற்றம்சாட்டினார்.