உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆக உயர்ந்துள்ளது.

உலகில் உள்ள சுமார் 200 நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கொரோனா என்னும் கொடிய வைரஸ். இதனால், ஒட்டு மொத்த உலக நாடுகளில் சுமார் 130 கோடி மக்கள் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர்.

கொரோனா வைரஸ் இவ்வளவு தூரம் தீவிரமடைந்துள்ள நிலையில், உலக நாடுகளால் இன்னும் மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால், வேறு வழியின்றி, இந்தியா உட்பட பல நாடுகளில் ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், வைரசை கட்டுப்படுத்த முடியவில்லை. கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே தான் வருகிறது.

குறிப்பாக அமெரிக்கா, இத்தாலி, ஸ்பெயின், சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், ஈரான் உள்ளிட்ட பல நாடுகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

இங்கிலாந்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா வைரஸ் பாதிப்பால், நோயாளிகளைத் தனிமைப்படுத்துவதற்கு இடமில்லாமல் அந்நாட்டு அரசு திணறி வருகிறது. இந்திய ஆயுர்வேத மருந்தால் கொரோனாவிலிருந்து, இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் குணமடைந்ததாகவும் கூறப்படுகிறது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உலக அளவில் நேற்று இரவு 10 லட்சத்தைக் கடந்த நிலையில், பலியானவர்களின் எண்ணிக்கை 59 ஆயிரத்தைத் தாண்டியது. ஆனால், தற்போது, உலகளவில் கொரோனாவால் 59,203 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,17,860 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 2,28,990 பேர் இதுவரை கொரோனா தாக்கத்திலிருந்து குணமடைந்துள்ளனர்.

கொரோனா வைரசின் பிறப்பிடமான சீனாவில் தற்போது புதிதாக கொரோனா தொற்று ஏற்படுவது முழுமையாகக் கட்டுப்படுத்தப் பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.