உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 40 ஆயிரத்தை நெருங்கி உள்ளது.

சீனாவிலிருந்து பரவத் தொடங்கிய கொரோனா என்னும் கொடிய வைரஸ், இன்று உலகம் முழுவதும் பரவிப் படர்ந்துள்ளது. இதனால், உலக மக்கள் யாவரும் வீடுகளில் முடங்கிப்போய் உள்ளனர். இதனால், உலக அளவில் சுமார் 200 நாடுகளில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

உலகளவில் கொரோனா வைரசால் இதுவரை 7,84,381 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,65,035 பேர் குணமடைந்துள்ளனர். அதேபோல், உலக அளவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை தற்போது 40 ஆயிரத்தை நெருங்கி வருகிறது.

அதே நேரத்தில், கொரோனா தோன்றிய சீனாவில், அதன் தாக்கம் படிப்படியாக தற்போது குறைந்து வருகிறது. ஆனால், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் கொரோனா நோய் வேகமாக அதிகரித்து வருகிறது.

அதன்படி, இத்தாலியில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 1 லட்சத்து ஆயிரத்து 739 ஆக அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 812 பேர் இத்தாலியில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, அங்கு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.

இத்தாலியைத் தொடர்ந்து, ஸ்பெயினில் நேற்று ஒரே நாளில் 913 பேர் உயிரிழந்துள்ளதால், அந்நாட்டில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 7,716 ஆக அதிகரித்துள்ளது. இதனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கையில் சீனாவை விட தற்போது ஸ்பெயின் முந்தியுள்ளது.

பிரான்சில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 418 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால், அங்கு மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,024 ஆக உயர்ந்துள்ளது.

ஈரானிலும் 117 பேர் ஒரே நாளில் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மொத்தம் இரண்டாயிரத்து 757 பேர் அங்கு உயிரிழந்திருக்கின்றனர்.

அதேபோல், அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் புதிதாக 19,988 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், அந்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,63,479 ஆக அதிகரித்துள்ளது.

இதனிடையே, உலக நாடுகளில் இந்த பலி எண்ணிக்கை அடுத்தடுத்த நாட்களில் மேலும் அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. இதனால், உலக மக்கள் யாவரும் கொரோனா வைரசால் கடும் பீதியடைந்துள்ளனர்.