பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கொரோனா வைரஸ் கிருமி போல் ஜோடிக்கப்பட்ட ஆட்டோ ஒன்று சென்னையில் உலா வருகிறது.கொரோனா வைரஸ், காற்றில் கூட பரவும் என்பதால் பொதுமக்கள் வீடுகளிலேயே இருக்கும் படி, மத்திய மாநில அரசுகள் 144 தடை உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

கொரோனாவுக்கு இன்னும் மருந்துகூட கண்டுபிடிக்கப்படாத நிலையில், அத்திவாசிய தேவைக்காக வெளியே வரும் பொதுமக்கள் யாராக இருந்தாலும், அவர்கள் சமூக இடைவெளி விட்டு வர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

ஆனாலும், அரசின் அனைத்து கட்டுப்பாடுகளையும் மீறி தினமும் தமிழகம் முழுவதும் பல்லாயிரக்கணக்காணோர், வீட்டை விட்டு வெளியே வருவதும், அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து, அபராதம் விதிப்பதும், வாகனங்களைப் பறிமுதல் செய்வதுமாக நாள்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இதனால், பொதுமக்களுக்கு கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் தமிழக அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.

அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு, சென்னையில் போக்குவரத்து காவலர் ஒருவர், கொரோனா வைரஸ் கிருமி வடிவம் கொண்ட, உருண்டையை தன் தலையில் சுமந்து, பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இதனைத்தொடர்ந்து, தற்போது கொரோனா போல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியைச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தொடங்கி உள்ளனர்.

கொரோனா வைரஸ் கிருமி போல் வடிவமைக்கப்பட்ட ஆட்டோ இதற்காக பிரத்தியேகமாகச் சென்னை மாநகராட்சி அதிகாரிகள் உருவாக்கியுள்ளனர். அதன் மூலம், பொதுமக்கள் அனைவரும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

கொரோனாவுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் அதே நேரத்தில், மாஸ்க் அணியாதவர்களுக்கு உடனடியாக 100 ரூபாய் அபராதம் விதிப்பதோடு, துணியால் செய்யப்பட்ட நான்கு மாஸ்க்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, கொரோனா வைரஸ் கிருமி போல் ஜோடிக்கப்பட்ட ஆட்டோ உலா வருவது, விழிப்புணர்வுக்காக இருந்தாலும், அதனைப் பார்க்கும் போது பொதுமக்களுக்குப் பீதி ஏற்படுத்தும் வகையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.