இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 அயிரத்தை நெருங்கும் நிலையில், பலி எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

யாரும் எதிர்பார்க்காத வகையில், இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு, அதிர்ச்சி அளிக்கும் வகையில் பரவி வருகிறது.

நேற்று முன் தினம் இந்தியா முழுவதும் சுமார் 315 க்கும் மேற்பட்டோர்க்கு கொரொனா தொற்ற பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்தியாவில் குறைந்த கால அளவில், இவ்வளவு அதிகமானோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுவது இதுவே முதல்முறையாகும்.

இந்நிலையில், இந்தியாவில் நேற்று ஒரே நாளில் சுமார் 450 பேருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை தற்போது 2 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. மிகச் சரியாக இந்தியா முழுவதும் சுமார் 1965 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அதேபோல், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 50 ஆக அதிகரித்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது. அத்துடன், இந்தியாவில் கொரோனா தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 2 ஆயிரத்தை நெருங்கி வரும் நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 151 பேர் இதுவரை குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய குடிசைப்பகுதி என்று வர்ணிக்கப்படும் மும்பையின் தாராவி பகுதியைச் சேர்ந்தவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவரின் குடும்பத்தினர் 7 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர், அவர்களுக்கு இன்று கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

ஆந்திராவில் மேலும் 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை அங்கு 132 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

புதுச்சேரி அருகே திருவாண்டார்கோவிலை சேர்ந்த ஒருவருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதியாகி உள்ளது. புதுவையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3 ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து வரும் நாட்களில், டெல்லி மாநாடு சென்று திரும்பியவர்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து ஊர் திரும்பியவர்களிடம் பரிசோதனை நடத்தப்பட இருப்பதால், கொரோனா பாதிப்பு எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

இந்தியாவில், நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரிக்கும் கொரோனா பாதிப்பால், பொதுமக்கள் அனைவரும் கடும் பீதியடைந்துள்ளனர்.