இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிப்பு எண்ணிக்கை 2,902 ஆக உயர்ந்துள்ளது.

சீனாவை போல், மக்கள் தொகை அதிகம் உள்ள இந்தியாவிலும் கொரோனா தாக்கம் அதி தீவிரமாகப் பரவி வருகிறது. இதனால், நாளுக்கு நாள் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

குறிப்பாக, மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 47 பேருக்கு கொரோனா பாதிப்பு தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால், அந்த மாநிலத்தில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை இதுவரை 537 ஆக அதிகரித்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு அடுத்தபடியாக, தமிழ்நாட்டில் 411 பேரும், டெல்லியில் 386 பேரும், கேரளாவில் 295 பேரும், உத்தரப்பிரதேசத்தில் 174 பேரும் கொரோனாவால் கடுமையாக பாதிக்கவிட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ராஜஸ்தானில் மேலும் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அந்த மாநிலத்தில் பாதிப்பு எண்ணிக்கை 191 ஆக உயர்ந்துள்ளது.

கர்நாடகாவில் பாகல்கோட் பகுதியில் தற்போது ஒருவர் உயிரிழந்ததால், கர்நாடகாவில் கொரோனா உயிரிழப்பு தற்போது 4 ஆக உயர்ந்துள்ளது.

அகமதாபாத்தில் இன்று மேலும் ஒரு பெண் கொரோனாவிற்கு உயிரிழந்தார். இதனால், குஜராத்தில் கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை தற்போது 10 ஆக உயர்ந்துள்ளது. அங்கு, புதிதாக 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, அந்த மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 105 ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62 லிருந்து 68 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 2,902 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதனிடையே, கொரோனா வைரஸ் பாதிப்பால் பெண்களை விட, ஆண்களே அதிகம் உயிரிழப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.