இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,301 ஆக உயர்ந்துள்ள நிலையில், பலி எண்ணிக்கை 56 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா என்னும் கொடிய வைரஸ், இந்தியாவில் மெல்ல ஊடுருவியபோதே, அதனைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது.

ஆனாலும், அதையும் தாண்டி, கொரோனா என்னும் வைரஸ், இந்தியா முழுவதும் கோரத் தாண்டவம் ஆடி வருகிறது. இதன் காரணமாக இந்தியாவில் இறப்பும், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்தே வருகிறது.

குஜராத் மாநிலம் கோத்ராவை சேர்ந்த 78 வயது முதியவர், வதோதரா மருத்துவமனையில் கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது உயிரிழந்துள்ளார். இதனால், கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை, அந்த மாநிலத்தில் 8 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்காக சிகிச்சை பெற்று வந்த ஹிமாச்சல் மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் சண்டிகர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 42 பேர் உட்பட, உத்தரப்பிரதேச மாநிலத்தில் புதிதாக 172 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், டெல்லி இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற 140 பேர் உட்பட, ஆந்திராவில் 161 பேருக்கு கொரோனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராஜஸ்தானில் மேலும் 14 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 154 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நிலையில், அவரது 9 மாத கர்ப்பிணி மனைவிக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை தற்போத, 2,301 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும். இந்தியாவில் கொரோனாவிற்கு இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 56 ஆக உயர்ந்துள்ளது.

அதே நேரத்தில், இந்தியா முழுவதும் 157 பேர், கொரோனா பாதிப்பிலிருந்து முழுவதுமாக குணமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

மேலும், சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் பிறந்த இரட்டைக் குழந்தைகளுக்கு கோவிட், கொரோனா என்று அவர்களது பெற்றோர்கள் பெயர் சூட்டியுள்ளது, பலரது கவனத்துயும் ஈர்த்துள்ளது.

இதனிடையே, கொரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாக விளையாட்டு பிரபலங்கள் சச்சின், கங்குலி, பி.வி.சிந்து, ராணி ராம்பால் உள்ளிட்ட 40 பேருடன், பிரதமர் மோடி இன்று காணோலி காட்சி மூலம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும், பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவது தொடர்பாகவும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார்.