சென்னையில் மாமியாரை, மருமகள் கடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அயனாவரம் நாராயணன் தெருவைச் சேர்ந்த 70 வயதான பத்மினிக்கு, 2 மகன்கள் உள்ளனர். இந்நிலையில், பத்மினிக்கும் இவரது மருமகள் மேனகாவிற்கும் கடந்த சில வருடங்களாக குடும்ப பிரச்சனை இருந்துள்ளது. இது நாளடைவில், அவர்களுக்குள் சொத்து தகராறாக மாறி உள்ளது.

பத்மினியின் குடும்ப சொத்தை பிரிப்பதில் அவர்கள் குடும்பத்துக்குள் கடும் பிரச்சனை எழுந்துள்ளது. இதில், தங்களுக்குச் சேரவேண்டிய சொத்தை, தனது கணவருக்குக் கொடுக்க மறுப்பதா? என்று மாமியார் பத்மினி மீது மருமகள் மேனகா கடும் கோபத்தில் இருந்துள்ளார்.

இந்நிலையில், சொத்து பிரச்சனையைத் தீர்ப்பதற்காக, மாமியாருக்கு சில காலம் மேனகா அவகாசம் கொடுத்ததாகத் தெரிகிறது. ஆனால், தனது முடிவிலிருந்து மாமியார் மாறாமல் விடாப்பிடியாக இருந்ததால், ஆத்திரமடைந்த மருமகள் மேனாக, மாமியாரைக் கடத்தி தனது உறவினர் ஒருவர் வீட்டில் அடைத்து வைத்துத் தொடர்ந்து சித்திரவதை செய்து துன்புறுத்தி வந்துள்ளார்.

இதனிடையே, பத்மினியைக் காணவில்லை என்று அவரது உறவினர்கள் கடந்த 15 ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், குடும்ப உறுப்பினர்களிடம் தொடர்ந்து விசாரித்து வந்துள்ளனர். அப்போது, மேனகா மீது சந்தேகமடைந்த போலீசார், அவரை பின்தொடர்ந்துள்ளனர். அப்போது, மேனகா கையும் களவுமாக போலீசாரிடம் பிடிபட்டார்.

இதனையடுத்து, பத்மினியை மீட்ட போலீசார், மருமகள் மேனகாவைக் கைது செய்தனர். இதனிடையே, சொத்துப் பிரச்சனைக்காக மாமியாரை, மருமகளே கடத்திய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.