மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீ வைத்து எரித்த கணவனை போலீசார் கைது செய்தனர்.

சென்னை ஆதம்பாக்கம் கக்கன் நகரைச் சேர்ந்தவர் ராஜன் என்கிற துண்டு பீடி ராஜன். இவருக்கும் இவரது மனைவி பஞ்சவர்ணத்திற்கும் கருத்து வேறுபாடு காரணமாக, குடும்பத்திற்குள் பிரச்சனை எழுந்துள்ளது.

இதனையடுத்து, வீட்டின் கதவைச் சாத்திக்கொண்டு, கணவன் - மனைவி இருவரும் உள்ளேயே சண்டைப் போட்டுக்கொண்டுள்ளனர். அப்போது பஞ்சவர்ணம், தீயில் எரிந்து அலறித் துடித்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து, பஞ்சவர்ணத்தை மீட்டு, கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்குத் தீவிரமாகச் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பஞ்சவர்ணத்திற்கு உடலில் 45 சதவீதம் அளவுக்கு தீ காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், மேஜிஸ்திரேட் அவரிடம் விசாரித்தார்.

அப்போது, “என் மேல் உள்ள கோபத்தில், கணவனே என் மேல் மண்ணெண்ணெய் ஊற்றி, சிகரெட்டால் தீ வைத்துக் கொளுத்தியதாக” வாக்குமூலம் அளித்துள்ளார். இதனையடுத்து, கொலை முயற்சி வழக்கில் ராஜனை போலீசார் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.

இதனிடையே, கணவன் - மனைவி பிரச்சனையில், கணவனே மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி சிகரெட்டால் தீ வைத்து எரித்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.