“அரசியலில் நடிகர் சிவாஜி நிலைமை தான் ரஜினி, கமலுக்கும் வரும்”  என்று முதலமைச்சர் பழனிசாமி விமர்சித்துள்ளார்.

சேலத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, அரசின் திட்டங்களுக்கு மக்களும், ஊடகங்களும் ஒத்துழைப்புத் தர வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

TN CM Edappadi Palaniswami

அப்போது, நடிகர்கள் ரஜினி, கமல் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்துப் பேசிய முதலமைச்சர், “ரஜினி வெற்றிடம் என்று சொன்னார். அவர் ஏன் விக்கிரவாண்டி, நாங்குநேரி ஆகிய 2 சட்டப்பேரவை இடைத்தேர்தல்களிலும் போட்டியிடவில்லை” என்றும் கேள்வி எழுப்பினார்.

“நடிகர் கமல் மிகப்பெரிய தலைவர் தானே?, அவர் ஏன் நாடாளுமன்றத் தேர்தலில் குறைவான ஓட்டுக்களைப் பெற்றார்? தங்களுக்கு 65, 66 வயது ஆகிவிட்ட காரணத்தினால், சினிமாவில் வாய்ப்பில்லாமல் கட்சி ஆரம்பிக்கின்றார்கள் என்றும், ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி ஆரம்பிக்கலாம்” என்றும் கூறினார். 

குறிப்பாக, “மற்றவர்களைக் குறை சொல்லிப் பேசுவது தவறாக உள்ளதாகவும், இத்தனை காலமாக அவர்கள் எங்கிருந்தார்கள்?” என்றும் கேள்வி எழுப்பினார். .

Rajinikanth Kamal Haasan

“இவர்களைவிட, மிகப்பெரிய நடிகர் சிவாஜி கணேசன். அவர் தேர்தலைச் சந்தித்து அவருக்கு ஏற்பட்ட நிலைதான், இவர்களுக்கும் வரும்” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

“இவர்களுக்கு அரசியலில் என்ன தெரியும்? எத்தனை உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி உள்ளது என்று தெரியுமா?” என்றும் அவர் கேள்வி எழுப்பினார். அந்தந்தப் பகுதி மக்களின் பிரச்சனை தெரியுமா? என்ன அடிப்படை தெரியும்? அடிப்படை தெரியாமலேயே தலைவர் போன்று உருவாக்கிக் கொண்டார்கள்” என்றும் அவர் கவலைத் தெரிவித்தார். 

“ இவர்கள், திரைப்படங்களில் நடித்தார்கள், மக்களின் பணத்தையும் பெற்றுக் கொண்டார்கள். அந்தப் பணத்தின் வாயிலாக இன்றைக்கு அரசியலில் பிரவேசிக்கின்றார்கள் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்தார்.

TN CM Edappadi Palaniswami

இதனிடையே, கட்சி ஆரம்பிக்கும் நடிகருக்குச் சிவாஜி நிலைதான் ஏற்படும் என முதலமைச்சர் பழனிசாமி கூறிய கருத்துக்கு, சிவாஜி சமூகநலப் பேரவை கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.