குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்று வருகிறது.

குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.இதன் காரணமாக, பல்வேறு நிலங்களில், கடந்த சில நாட்களா 144 தடை உத்தரவு போடப்பட்டதுடன், பல்வேறு பகுதிகளில் கல்லூரிகளுக்குத் தொடர் விடுமுறையும் அறிவிக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சார்பில் சென்னையில் தற்போது பிரமாண்ட பேரணி தொடங்கியது.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த பேரணியில் கி.வீரமணி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், ஜவாஹிருல்லா, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் பங்கேற்று வருகின்றனர். மேலும், எல்.பி.எஃப், சி.ஐ.டி.யூ. உள்ளிட்ட தொழிற்சங்கங்களும் பேரணியில் பங்கேற்று வருகின்றன.

சென்னை எழும்பூர் தாளமுத்து நடராசன் மாளிகை அருகிலிருந்து, இந்த பேரணி தொடங்கியது. இந்த பிரமாண்ட பேரணியானது லேங்ஸ் தோட்ட சாலை, சித்ரா தியேட்டர் சந்திப்பு, புதுப்பேட்டை வழியாக ராஜரத்தினம் ஸ்டேடியம் வரை இந்த பேரணி நடைபெறுகிறது. இதனால், பேரணி நடைபெறும் வழியெங்கும் போலீஸ் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமான அளவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

இந்த பேரணிக்கு, போலீசார் அனுமதி வழங்க மறுத்த நிலையில், நீதிமன்றத்தில் அனுமதியுடன் இந்த பேரணி நடைபெற்று வருகிறது. பேரணியை வீடியோ பதிவு செய்ய நீதிமன்றம் அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, கூட்டத்தை வீடியோ படம் எடுக்க 2 ட்ரோன் கேமராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அதேபோல்,கூட்டத்திற்குத் தகுந்தார்போல், ட்ரோன் கேமராக்கள் அதிகரிக்கப்படும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், இந்த பேரணிக்கு 2 கூடுதல் ஆணையர்கள் தலைமையில் 5000 போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அதேபோல், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகதற்போது, 6 வஜ்ரா தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கும் 3 வருண் வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டுள்ளன. மேலும், தீயணைப்பு வாகனங்களும் அந்தந்த பகுதிகளில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இதனிடையே, திமுக நடத்தி வரும் இந்த பிரமாண்ட பேரணியானது தற்போது, அமைதியான முறையில் நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.