தமிழ்நாட்டின் வேலை தமிழர்களுக்கே என்பதை வலியுறுத்தி தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் 
மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், சென்னையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தமிழக வேலை தமிழருக்கே என்று வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டம் நடைபெற்றது.

Chennai Human Chain Protest for Tamil nadu Jobs

இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும், அரசு மற்றும் தனியார் வேலைகள் அந்தந்த மாநிலத்தவர்க்கே வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக மாநிலங்கள் தோறும் பல தனிச் சட்டங்கள் இயற்றப்பட்டு, அந்தந்த மாநிலங்களில்  செயல்பாட்டில் உள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் மட்டும், அப்படி எந்தச் சட்டமும் நடைமுறையில் இல்லை.

இதனால், தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே வழங்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி, இன்று சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் முன்பாக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன், தலைமையில் ஆயிரக்கணக்கானோர் மனிதச் சங்கிலி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தின்போது, வெளி மாநிலத்தவர்களுக்கு எதிராகக் கண்டன முழக்கங்களை எழுப்பினர். போராட்டத்தின்போது பேசிய தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ.மணியரசன், “தமிழ்நாட்டில் தமிழர்கள் ஆதரவற்றவர்களாக வாழ்வுரிமையற்றவர்களாக வாழும் நிலை உள்ளது. மத்திய அரசின் தொழிற்சாலைகள், அலுவலகங்களில் 90 விழுக்காடு வட மாநிலத்தவர்களைத்தான் வேலைக்குச் சேர்க்கிறார்கள். 

Chennai Human Chain Protest for Tamil nadu Jobs

கிராமப்புற வங்கிகளில் மேலாளர்கள், எழுத்தர்களாக வட இந்தியர்களைப் பணியமர்த்துகிறார்கள். அவர்கள் தமிழும் பேசுவதில்லை, ஆங்கிலமும் பேசுவதில்லை. மத்திய அரசு இன ஒதுக்கல் கொள்கையைக் கடைப்பிடிக்கிறது” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினார்.

இதனையடுத்து, போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.

Chennai Human Chain Protest for Tamil nadu Jobs

இதனிடையே, போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதவர்கள் #TamilnaduJobsForTamils #தமிழகவேலைதமிழருக்கே ஆகிய Hashtag-களைப் பயன்படுத்தினார்கள். இதனால், #தமிழகவேலைதமிழருக்கே என்ற Hashtag இன்று டிரண்ட் ஆனது குறிப்பிடத்தக்கது.