சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் தினமும் உயிர் பலி கேட்டுக்கொண்டே இருக்கிறது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் அதனால் ஏற்படும் உயிர் இழப்புகள் பற்றி தினமும் மாலை 6 மணி அளவில் தமிழக அரசு புள்ளி விபரங்களை வெளியிட்டு வருகிறது.

ஆனால், அதன் பிறகு இரவு மற்றும் காலையில் வேளையில் அடுத்தடுத்து உயிர் இழப்புகள் தினமும் ஏற்பட்டுக்கொண்டே வருகிறது. அதன்படி, சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக உயிர் இழப்புகள் ஏற்பட்ட நிலையில், சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 40 பேர் தற்போது வரை உயிரிழந்துள்ளனர்.

அதன்படி, சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 3 முதியவர்கள் உள்பட 5 பேர் இன்று ஒரே நாளில் உயிரிழந்துள்ளனர்.

அதேபோல், சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் 7 பேரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 பேரும், ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் 4 பேரும், சென்னை ஆயிரம் விளக்கு தனியார் மருத்துவமனையில் ஒரு பெண் உள்பட 3 பேர் என ஒட்டுமொத்தமாக இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலி எண்ணிக்கை தற்போது 501 ஆக அதிகரித்துள்ளது.

மேலும், சென்னையில் அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 5,828 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல், தண்டையார்பேட்டையில் 4,743 பேருக்கும், தேனாம்பேட்டையில் 4,504 பேருக்கும், கோடம்பாக்கத்தில் 3,959 பேருக்கும், அண்ணாநகரில் 3,820 பேருக்கும், திருவிக நகரில் 3,244 பேருக்கும், அடையாறு மண்டலத்தில் 2,144 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே, சென்னை மாநகராட்சியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டிருந்த 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். ஏற்கனவே 3 அதிகாரிகள் விடுக்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குப் பதிலாக, புதிதாக 3 அதிகாரிகள் தமிழக அரசு நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.