ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாகப் பிரிட்டன் நள்ளிரவு முதல் விலகியது.

இங்கிலாந்து, கடந்த 2016-ம் ஆண்டு ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற முடிவு எடுத்தது. இது “பிரெக்ஸிட்” என்று அழைக்கப்படும், ஐரோப்பிய ஒன்றியத்தில், கிட்டத்தட்ட 47 ஆண்டுகள் இங்கிலாந்து இணைந்திருந்து இருந்தது.

இதனையடுத்து, கடந்த 2016 ஆம் ஆண்டு ஐரோப்பியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேற இங்கிலாந்து முடிவு செய்தது. அதன்படி, இந்த விவகாரத்தைக் கையில் எடுத்த 2 பிரதமர்கள் ராஜினாமா செய்தார்கள். அதன் பின், பிரதமரான போரிஸ் ஜான்சன், பிரெக்ஸிட்டை நிறைவேற்ற முயன்றார்.

“பிரெக்ஸிட்“ ஒப்பந்தத்தை நிறைவேற்ற, நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டுத் தேர்தலைச் சந்தித்தார்.

இந்த தேர்தலில் வெற்றி பெற்ற அவர், நாடாளுமன்றத்தில் “பிரெக்ஸிட்” ஒப்பந்தத்தைத் தாக்கல் செய்து ஒப்புதல் பெற்றார். பின்னர், நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அந்த ஒப்பந்தம் வெற்றிகரமாக நிறைவேறியது.

இதனையடுத்து, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து அதிகாரப்பூர்வமாகப் பிரிட்டன் நள்ளிரவு முதல் விலகியது. இதனை இங்கிலாந்து மக்கள் ஆராவாரமுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.

லண்டனில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள், தேசிய கொடியை ஏந்தியும், சுதந்திரம் கிடைத்துவிட்டதாக முழக்கங்களை எழுப்பி உற்சாக மிகுதியால் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன், அந்நாட்டு அரசு அலுவலகங்கள் பெரும்பாலும், தேசிய கொடி வண்ணத்தில் மின்விளக்குகளால் ஒளிர்ந்தன.

குறிப்பாக, “பிரெக்ஸிட்” நினைவாக ஜனவரி 31 ஆம் தேதியைத் தாங்கிய 50 பென்ஸ் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அத்துடன், இங்கிலாந்து சார்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் 73 பேர் தங்களது பதவியை இழக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகியதற்கு, பிரிட்டனின் அங்கமாக உள்ள ஸ்காட்லாந்து கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.