சென்னையில் 3 முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு மர்ம நபர் ஒருவர், தொலைப்பேசி மூலம் மிரட்டல் விடுத்தார். அதன்படி, சென்னையின் முக்கியமான 3 இடங்களில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறியுள்ளார்.

குறிப்பாக விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாகக் கூறிவிட்டு, இணைப்பை துண்டித்துள்ளார்.

இதனால், பதறிப்போன போலீசார், குறிப்பிட்ட 3 இடங்களிலும் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். அத்துடன், மோப்ப நாய்கள் வரவழைக்கப்பட்டு, விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என அனைத்து இடங்களிலும் தீவிரமாகச் சோதனையிட்டு வருகின்றனர்.

அத்துடன், வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகளைக் கொண்டு, போலீசார் தீவிரமாகச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் அதிகம் கூடும் இடங்களில், மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தொடர்ந்து சோதனையில் ஈடுபட்டு வருவதால், பொதுமக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.

மேலும், வழக்கத்தை விட போலீசார் அதிகமானோர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனால், விமான நிலையம், எழும்பூர் ரயில் நிலையம், கோயம்பேடு பேருந்து நிலையம் என 3 இடங்களிலும் பரபரப்பான சூழல் நிலவுகிறது.