பீகாரில் துப்பாக்கி முனையில் இளைஞருக்குக் கட்டாய திருமணம் நடைபெற்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால், பொதுமக்கள் அனைவரும் வீடுகளில் முடங்கி உள்ளனர். ஆனால், ரவுடிகள் சிலர், இது தான் சரியான நேரம் என்று எண்ணி, சில இடங்களில் தங்கள் வீராப்புகளைக் காட்டி வருகின்றனர். அப்படி ஒரு சம்பவம் தான், பீகாரில் நடந்துள்ளது.

பீகார் மாநிலத்தில் உள்ள வைசாலி மாவட்டத்தைச் சேர்ந்த 25 வயதான அமித், அங்குள்ள கடைத் தெருவில் வீட்டிற்குத் தேவையான மளிகை பொருட்கள் மற்றும் காய்கறி வாங்குவதற்காக, தனது தந்தையுடன் சென்றுள்ளார்.

அப்போது, 5 பேர் கொண்ட கும்பல் அங்கு திடீரென்று வந்து, அமித் மற்றும் அவரது தந்தையை வழிமறித்து நின்று துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளது. இதில், பயந்துபோன அமித்தின் தந்தை அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

இதனையடுத்து, அமித்தை மட்டும், அந்த 5 பேர் கொண்ட கும்பல், தங்களது காரில் கடத்திச் சென்றது. அங்கிருந்து சில கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பக்கத்துக்கு கிராமத்துக்குச் சென்ற அந்த ரவுடி கும்பல், அங்கு ஒரு வீட்டிலிருந்த இளம் பெண் ஒருவருக்குத் தாலி கட்டச் சொல்லி, அமித்தை அவர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி உள்ளனர்.

ஆனால், அந்த பெண்ணுக்குத் தாலி கட்ட மறுத்த அமித், அந்த கும்பலுடன் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். இதனால், கடும் ஆத்திரமடைந்த அந்த கும்பல், அமித்தை தாக்கி, அந்த பெண்ணுக்குத் தாலி கட்ட வைத்தனர்.

இந்நிலையில், ரவுடி கும்பலிடமிருந்து தப்பிச் சென்ற அமித்தின் தந்தை, அங்குள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார். மேலும், போலீசார் உதவியுடன், குறிப்பிட்ட அந்த கிராமத்திற்கு வந்து தனது மகன் அமித்தை தேடி உள்ளார்.

அப்போது, அமித்தை கடத்திச் சென்ற கார் அங்கு நின்றிருப்பதைப் பார்த்து, அந்த வீட்டிற்குள் போலீசார் சென்றுள்ளனர். போலீசாரை கண்ட அந்த ரவுடி கும்பல், அமித்தை அப்படியே விட்டுவிட்டு, தப்பி ஓடியுள்ளனர். பின்னர், அமித்தை போலீசார் மீட்டனர்.

இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், தப்பி ஓடிய மர்ம கும்பலைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர். மேலும், அமித்துக்கும், அமித் தாலி கட்டிய பெண்ணிற்கும் எப்படி அறிமுகம் என்றும், அந்த பெண்ணிற்கும் ரவுடி கும்பலுக்கும் எப்படி பழக்கம் என்ற கோணத்திலும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல், அந்த இளம் பெண் தனது பெற்றோரிடம் அருகில் உள்ள ஒரு கிராமத்தில் வசித்து வரும் நிலையில், அந்த இடத்தையும் கண்டுபிடித்து, அந்த பெண்ணிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனிடையே, துப்பாக்கி முனையில் இளைஞரை கடத்திச் சென்று, இளம் பெண்ணுக்குக் கட்டாய திருமணம் செய்து வைத்த சம்பவம், பீகாரில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.