வங்கி ஏ.டி.எம்.யை கொள்ளையடிக்க முயன்ற 2 கல்லூரி மாணவர்கள் அதிரடியாகக் கைது செய்யப்பட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கீழ்படப்பை கரசங்கால் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் ஏ.டி.எம். மையம் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், அந்த ஏ.டி.எம்.ல் பணம் எடுப்பது போல், 2 கல்லூரி மாணவர்கள் உள்ளே சென்றுள்ளனர். பின்னர், ஏ.டி.எம்.ன் கதவை மூடிக்கொண்டு, ஏ.டி.எம். இயந்திரத்தை உடைக்க முயன்றுள்ளனர்.

அப்போது, ஏ.டி.எம். இயந்திரத்திலிருந்து சிக்னல் மூலம் மும்பையில் உள்ள தலைமை அலுவலகத்தில் அலாறம் ஒலித்துள்ளது. அதனால், அதிர்ச்சியடைந்த வங்கி அதிகாரிகள், ஏ.டி.எம். அமைந்துள்ள காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, விரைந்து வந்த போலீசார், ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக்கொண்டிருந்த 2 மாணவர்களையும் சுற்றி வளைத்து, கையும் களவுமாகக் கைது செய்தனர்.

பின்னர், அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவர்கள் பெயர் யோகேஷ் மற்றும் இறையன்பு என்பது தெரியவந்தது. மேலும், இவர்கள் இருவரும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அவர்கள் அங்குள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதும் தெரியவந்தது.

வங்கி ஏ.டி.எம். இயந்திரத்தை உடைத்துக் கொள்ளையடிப்பது தொடர்பாக, யூடியூப் மூலம் வீடியோ பார்த்துத் தெரிந்துகொண்டதாகவும், விசாரணையில் மாணவர்கள் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து, இவர்களிடம் வேறு என்ன மாதிரியான திட்டங்கள் உள்ளன என்பது குறித்தும், வேறு எந்த மாதிரியான திருட்டில் ஈடுபட இருந்தார்கள் என்பது குறித்தும் போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.