சி.ஏ.ஏ.வுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்ட ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் ஃபேஸ்புக் கணக்கு முடக்கப்பட்டுள்ளதாக, ஃபேஸ்புக் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, டெல்லியில் ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, மாணவர்களின் போராட்டத்தில் கலந்துகொண்ட இளைஞன் ஒருவன், திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது துப்பாக்கியால் சுட்டார். இதில், பலரும் படுகாயம் அடைந்தனர். துப்பாக்கியால் சுடுவதற்கு முன்பு “இதோ உங்கள் விடுதலை” என்று அவர் கூறியபடியே, மாணவர்கள் மீது அவன் துப்பாக்கியால் சுட்டுள்ளான்.

பின்னர், சில மணி நேர பரபரப்பிற்குப் பிறகு, போலீசார் அவனை மடக்கிப் பிடித்து கைது செய்தனர்.

இதனையடுத்து, அவனிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவன் நொய்டாவைச் சேர்ந்த 19 வயது கோபால் சர்மா என்பது தெரியவந்தது.

மேலும், மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவற்கு முன்பு, தன்னுடைய ஃபேஸ்புக் பக்கத்தில் கோபால் சர்மா லைவ் வீடியோ வெளியிட்டுள்ளார்.

இதில், தான் இறந்துவிட்டால் தன் மீது “காவிக் கொடி” போர்த்த வேண்டும் என்றும், தன்னுடைய ஆதரவாளர்கள் “ஜெய் ஸ்ரீராம்” என்று முழக்கமிட வேண்டும் என்றும் அவன் பேசியிருக்கிறான்.

அத்துடன், துப்பாக்கிச்சூட்டைக் கண்டித்து ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, “துப்பாக்கியுடன் மாணவர்கள் மீது ஒருவன் நீண்ட நேரம் மிரட்டியும், துப்பாக்கியால் சுட்டபோதும், போலீசார் விரைந்து செயல்படாமல், நீண்ட நேரம் வேடிக்கை பார்த்தது ஏன்?” என்றும் கேள்வி எழுப்பினர்.

மேலும், கணிசமான அளவில் போலீஸ் படை குவிக்கப்பட்டிருந்த இடத்தில் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது என்றும், போலீசார் இருக்கும்போதே துப்பாக்கிச்சூடு எப்படி நடந்திருக்கும் என்றும் ப.சிதம்பரம் தனது டிவிட்டரில் கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனிடையே, டெல்லி ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியவரின் ஃபேஸ்புக் கணக்கு அதிரடியாக முடக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக ஃபேஸ்புக் நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தில், “துப்பாக்கிச்சூடு போன்ற வன்முறையில் ஈடுபடுவோருக்கு பேஸ்புக் இடமளிக்காது. துப்பாக்கிச்சூடு சம்பவத்தை ஆதரிப்பது போன்ற கருத்துப் பதிவுகளும் நீக்கப்படும். அவர்களுக்கு ஆதரவாகப் பதில் அளித்தவர்கள் கணக்குகளும் நீக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்று பேஸ்புக் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.