மக்கள் ஊரடங்கை 7 மாநில அரசுகள் மேலும் நீட்டித்துள்ளன.

கொரோனா வைரஸ் எதிரொலி காரணமாக இந்தியா முழுவதும் மக்கள் அனைவரும் சுய ஊரடங்கிற்கு ஒத்துழைக்க வேண்டும் என பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்ததையடுத்து, நேற்றைய தினம் நாடு முழுவதும் ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டது.

ஒரு நாள் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்தால், கொரோனா என்னும் கொடிய நோய் மேலும் பரவாமல் தடுக்க முடியும் என்பதையும், கொரோனா வைரசைக் கட்டுப்படுத்த முடியும் என்பதையும் நேற்றைத் தினம் இந்திய அரசு செய்து காண்பித்தது.

மேலும், நேற்றைய தினம் அந்தந்த மாநிலங்கள் முழுவதும் கிருமி நாசினிகள் தெளிக்கப்பட்டு, பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

இந்நிலையில், இந்த ஒரு நாள் ஊரடங்கை பல்வேறு மாநிலங்களும் தொடர்ந்து நீட்டித்துள்ளன.

அதன்படி, மேற்குவங்கம், சண்டிகர், உத்தரகாண்டில் வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் மக்கள் ஊரடங்கு இன்று காலை வரை நீட்டிக்கப்பட்டது. இதனையடுத்து, மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் முழுவதும் மார்ச் 31 ஆம் தேதி வரை, ஊரடங்கு நீடிக்கும் என்று, அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தெரிவித்துள்ளார்.

மேலும், குஜராத்தில் மாநிலத்தில் அகமதாபாத், வதோதரா, சூரத் மற்றும் ராஜ்கோட் ஆகிய நகரங்களில் வரும் மார்ச் 25 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

அதேபோல், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று முதல் மார்ச் 31 ஆம் தேதி வரை, மாநிலம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்படுவதாக அந்த மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார்.

அத்துடன், நேற்று நள்ளிரவு முதல் மேற்கு வங்காளத்தில் பேருந்து சேவை முடக்கப்பட்டுள்ளது. வெளிமாநில பேருந்துகளும் மாநிலத்திற்குள் நுழைய அதிரடியாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது.