5 ஆம் கட்ட ஊரடங்கில் சென்னை உள்பட 11 நகரங்களில் ஊரடங்கு காலம் நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி மாலை முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. முதலில் 21 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் கட்டுக்குள் வராததால், 4 வது முறையாக வரும் 31 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனினும், தமிழகத்தின் தலைநகர் சென்னை உட்பட இந்தியா முழுவதும் சுமார் 11 முக்கிய நகரங்களில் கொரோனாவை கட்டுப்படுத்த முடியாமல் அந்தந்த மாநில அரசுகள் திணறி வருவதாகவும் கூறப்படுகிறது.

அதன்படி, இந்தியாவின் மெட்ரோ நகரங்களான தலைநகர் டெல்லி, மும்பை, புனே, தானே, ஜெய்ப்பூர், கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, அகமதாபாத், இந்தூர் ஆகிய நகரங்களில் கொரோனாவின் வீரியம் சற்றும் குறையாமல் அதிக அளவில் காணப்படுகிறது.

குறிப்பாக, இந்த 11 முக்கிய நகரங்களிலும் காணப்படும் கொரோனா பாதிப்பானது, இந்தியாவின் ஒட்டுமொத்த பாதிப்பில் 70 சதவிகிதம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், கொரோனா பாதிப்பால் நாடு முழுவதும் சுமார் 23 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக, இந்தியாவில் 5 ஆம் கட்ட ஊரடங்கு நீட்டிக்கப்படலாம் என்றும், குறிப்பாக இந்த குறிப்பிட்ட 11 நகரங்களில் ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல்கள் தற்போது வெளியாகி உள்ளன.