கொரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால், மிகப்பெரிய சவாலாக உள்ளதாக முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில், கொரோனாவை கட்டுப்படுத்துவது தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி, காணொலி காட்சி மூலம் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அப்போது, மாவட்டங்களில் எடுக்கப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் கேட்டறிந்தார். இந்த ஆலோசனையில், துணை முதலமைச்சர், சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பின், செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் பழனிசாமி, “கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மாவட்ட அளவில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் பற்றி ஆட்சியர்களிடம் கேட்டறிந்ததாக” குறிப்பிட்டார்.

“ புதிதாக 35,000 PCR கருவிகள், 5 லட்சம் ரேபிட் டெஸ்ட் கருவிகள் வாங்க ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் மொத்தம் 3,371 வென்டிலேட்டர்கள் உள்ளன. 65 லட்சம் மூன்றடுக்கு முகக்கவசங்கள், 3 லட்சம் என்.95 முகக்கவசங்கள் உள்ளதாகவும்” கூறினார்.

“கொரோனா தொற்று எளிதாகப் பரவும் என்பதால், அவற்றைக் கட்டுப்படுத்துவது மிகப்பெரிய சவாலாக உள்ளது என்றும், இதனால், நாள்தோறும் சராசரியாக 5,590 பேருக்கு பரிசோதனை செய்யும் வசதி தமிழகத்தில் தற்போது செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

“தமிழகத்தில் கொரோனாவை தடுக்க 12 குழுக்கள் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றும், கொரோனா தொற்றைத் தடுப்பதுதான் மிகவும் முக்கியம் என்றும், மத்திய அரசு கூறுவதற்கு முன்னரே தடுப்பு நடவடிக்கைகளை, தமிழக அரசு துரிதப்படுத்தியது” என்றும் பெருமையோடு குறிப்பிட்டார்.

“தமிழக அரசு தொடர்ந்து மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால், கொரோனா தொற்று பரவும் தீவிரம் தற்போது குறைந்துள்ளது என்றும், தமிழகத்தில் இன்று மேலும் 25 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தற்போது 1,267 ஆக அதிகரித்துள்ளது என்றும் முதலமைச்சர் குறிப்பிட்டார்.

மேலும், “கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 லிருந்து 15 ஆக உயர்ந்துள்ளது என்றும், கொரோனா பாதிப்பிலிருந்து இதுவரை 180 பேர் குணம் அடைந்துள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்தார்.

அதேபோல், “மாநிலம் முழுவதும் ஆதரவற்ற 54 ஆயிரத்திற்கும் அதிகமானோருக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது என்றும், முதல் அமைச்சர் நிவாரண நிதிக்கு இதுவரை 134.64 கோடி வந்துள்ளதாகவும்” குறிப்பிட்டார்.

“கொரோனாவால் பாதித்தவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் சத்தான உணவுகள் வழங்கப்படுகிறது என்றும், மருத்துவ உபகரணங்கள் போதிய அளவில் இல்லை என எதிர்க்கட்சிகள் கூறுவது முற்றிலும் தவறானது” என்றும் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பிய பணக்காரர்கள்தான் கொரோனாவை இறக்குமதி செய்துள்ளனர் என்றும், ஏழைகளுக்கு எந்த நோயும் இல்லை என்றும்” முதலமைச்சர் பழனிசாமி குறிப்பிட்டார்.

“அரசின் தீவிர நடவடிக்கையால் நோயாளிகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது என்றும், இன்னும் சில நாட்களில் முற்றிலுமாக கட்டுப்படுத்தப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி நம்பிக்கைத் தெரிவித்தார்.