தமிழகத்தில் ஒரே நாளில் 17 பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், தலைமைச்செயலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றி அதிகாரிகளுடன் முதலமைச்சர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

அதன்பிறகு, செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, “தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து, யாரும் அச்சமடைய வேண்டாம்” என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 17 பேருக்குப் புதிதாக கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 50 லிருந்து தற்போது 67 ஆக உயர்ந்துள்ளதாகவும்” முதலமைச்சர் கவலைத் தெரிவித்தார்.

“அதன்படி, ஈரோட்டில் 10 பேரும், சென்னையில் 4 பேரும், மதுரையில் 2 பேரும், திருவாரூரில் ஒருவரும் தற்போது புதிதாகப் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சர் பழனிசாமி வேதனை தெரிவித்தார்.

“ கொரோனா தொற்றிலிருந்து 5 பேர் குணமாகி தற்போது வீடு திரும்பியுள்ளனர் என்றும், தமிழகத்தில் ஒருவர் மட்டும் தான் இதுவரை கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார்” என்றும் சுட்டிக்காட்டினார்.

“கொரோனா அறிகுறி உள்ள 121 பேரின் ஆய்வு முடிவுகள் இன்னும் வர வேண்டியுள்ளது என்றும், கொரோனா அறிகுறி உள்ளோருக்கு மட்டுமே தற்போது பரிசோதனை செய்யப்படுகிறது” என்றும், கொரோனாவுக்கு மருந்து தனிமைதான் என்றும் முதலமைச்சர் பழனிசாமி சுட்டிக்காட்டினார்.

“கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காகத் தலைமைச்செயலாளர் தலைமையில் 11 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்ட அவர், கொரோனா அறிகுறியுடன் தமிழகம் முழுவதும் 1,925 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றும் தெரிவித்தார்.

அத்துடன், “11 லட்சம் பாதுகாப்பு கவசங்களும், 1.5 கோடி முகக் கவசங்கள் (MASK) ஆர்டர் செய்யப்பட்டுள்ளது என்றும் முதலமைச்சர் கூறினார்.

“கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகத்தில் 3,018 வெண்டிலேட்டர் தயார் நிலையில் உள்ளதாகவும், கொரோனா சிகிச்சைக்காகத் தமிழகத்தில் 17,089 படுக்கைகள் தயார் நிலையில் இருப்பதாகவும்” முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.