தமிழகத்தில் 12 ஆயிரத்து 519 பேர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாகச் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், “வெளிநாடுகளிலிருந்து இந்தியா திரும்பியவர்கள்

வீட்டில் தனிமையில் இருக்க வேண்டும் என்பது கோரிக்கை இல்லை, உத்தரவு” என்று விளக்கம் அளித்தார்.

குறிப்பாக, “வெளிநாடுகளிலிருந்து தமிழகம் திரும்பியவர்கள் அந்த உத்தரவைக் கட்டாயம் பின்பற்ற வேண்டும்” என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து பேசிய அவர், கொரோனா வைரஸ் இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் நபர்கள் அனைவரும், கொரோனா பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் தமிழகம் முழுவதும் இதுவரையில் 12 ஆயிரத்து 519 பேர் வீட்டில் தனிமையில் இருக்க வைக்கப்பட்டுள்ளனர்” என்றும் குறிப்பிட்டார்.

“வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் அனைவரும், கட்டாயம் வீட்டில் இருக்க வேண்டும் என்றும், அதனை மீறி வெளியே வந்தால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.

சென்னை, கன்னியாகுமரி, கோவை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், நெல்லை, சிவகங்கை ஆகிய 10 மாவட்டங்களில் தனிமைப்படுத்தப்பட்டுக் கண்காணிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கை தற்போது அதிகளவில் இருப்பதாகவும், அந்த மாவட்டங்களில் முகக் கவசங்கள், வெண்டிலேட்டர்கள் உள்ளிட்ட போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் தற்போது அதிகப்படியான எண்ணிக்கையில் இருப்பதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் சுட்டிக்காட்டினார்.

அதேபோல், “ஆயுதப் படை காவலருக்கு கொரோனா என்று பரவிய செய்தி வதந்தி என்றும், அவருக்கு கொரோனா குறித்த அறிகுறிகள் இருந்ததால் அவர் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சோதனை குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் விஜயபாஸ்கர் கூறினார்.

தமிழ்நாட்டிலுள்ள எல்லா அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், 10 ஆயிரம் படுக்கைகள் வரை தயார்ப்படுத்த முடியும் என்றும், ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் படுக்கை வசதிகள் ஏற்பாடு செய்ய தற்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது”என்றும் அவர் குறிப்பிட்டார்.

முக்கியமாக, “கொரோனாவால் பாதிக்கப்படுபவர்கள் குறித்த தகவல்கள் தமிழக அரசால் முறைப்படி அறிவிக்கப்படுகிறது என்றும், இதனால் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும், யாரும் வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் கேட்டுக்கொண்டார்.