தமிழகத்தில் நாளை மாலை 6 மணி முதல், மார்ச் 31 வரை அனைத்து மாவட்ட எல்லைகளை மூட அதிரடியாக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
 
கொரோனா வைரஸ் தாக்கம் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், இன்று தமிழக சட்டப்பேரவை கூடியது. 

CoronaVirus TamilNadu

அப்போது முதலமைச்சர் பழனிசாமி, சட்டப்பேரவையில் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை இன்று வெளியிட்டார்.

அதன்படி, “தமிழகத்தில் கொரோனா தொற்றால் இதுவரை 9 பேர் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், அரசு தடுப்பு நடவடிக்கைளை மேற்கொண்டு வருவதாக” குறிப்பிட்டார்.

CoronaVirus TamilNadu

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கையால் பாதித்த குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்குவது பற்றி அரசு பரிசீலனை செய்து வருவதாகவும் கூறிய அவர், கொரோனா தடுப்புக்கு அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு தர வேண்டும்” என்றும் கேட்டுக்கொண்டார்.

மேலும், “மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடுவதாகவும், இந்த உத்தரவு நாளை மார்ச் 24 ஆம் தேதி மாலை 6 மணி முதல் தொடங்கி, மார்ச் 31 ஆம் தேதி வரை நடைமுறையில் இருக்கும்” என்றும் அவர் தெரிவித்தார். 

CoronaVirus TamilNadu

இதனிடையே, இந்த அறிவிப்பைத் தீவிரமாக அமல்படுத்த 144 சட்டப்பிரிவின் கீழ் ஆட்சியர், காவல் ஆணையர்களுக்கு உத்தரவுகளைப் பிறப்பிக்க ஆணையிடப்பட்டுள்ளது. அதன்படி சில கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி,

CoronaVirus TamilNadu

- தனியார் போக்குவரத்து, கார், ஆட்டோ, டாக்சி ஆகியவை இயங்காது.
- அத்தியாவசிய மற்றும் அவசரப் பணிகள் ஆகியவற்றுக்கு மட்டுமே போக்குவரத்தைப் பயன்படுத்த வேண்டும்.  
- பால், காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் கடைகள் தவிர அனைத்து கடைகளும், வணிக வளாகங்களும் இயங்காது.
- அரசு அலுவலகங்கள் செயல்படாது.
- தனியார் நிறுவனங்கள், ஐடி பணியாளர்கள் வீட்டிலிருந்தே வேலை செய்யலாம்.
- தனியார் நிறுவனங்கள் ஊதிய பிடித்தம் செய்யக்கூடாது.
- அம்மா உணவகங்கள் வழக்கம்போல் செயல்படும்.
- மருந்து, காய்கறி, மளிகைக்கடைகள் ஆகிய அத்தியாவசியப் பொருட்களுக்கான விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாது. 

என பல்வேறு விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்த உத்தரவை அனைத்து தரப்பினரும் பின்பற்ற வேண்டும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.