சென்னையில் கொரோனாவுக்கு இன்று ஒரே நாளில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ், தமிழகத்தின் பிற பகுதிகளில் சற்று குறைந்திருந்தாலும், தலைநகர் சென்னையில் அது மையம் கொண்டு, சென்னை மக்களை கடும் அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது.

சென்னையில் கொரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.

இதனிடையே, சென்னை மாதவரம் ஆவின் பால் பண்ணையின் மிஷின் ஆபரேட்டர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளார். கடந்த மே 26 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதியாகி ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்தார்

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மேலும் 9 பேர் சிகிச்சைப் பலனின்றி இன்று உயிரிழந்தனர். இதனால், இன்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் இதுவரை 2,737 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது.

அதேபோல், திரு.வி.க.நகரில் 1,556 பேரும், கோடம்பாக்கத்தில் 1,798 பேரும், தேனாம்பேட்டையில் 1,662 பேரும், தண்டையார்பேட்டையில் 1,661 பேரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், சென்னையில் கொரோனா பாதிப்பைக் கட்டுக்குள் கொண்டுவர வீடு வீடாகச் சென்று ஆய்வு நடத்தவும், கொரோனா பாதிப்பு அதிகமுள்ள இடங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளதாகச் சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், சென்னையில் விதிகளைப் பின்பற்றாத சலூன் கடைகளை 4 மாதங்களுக்குத் திறக்க முடியாது என்றும், சென்னை மாநகராட்சி ஆணையர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனிடையே, சென்னையில் உள்ள அனைத்து அம்மா உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த விலையில்லா உணவைச் சென்னை மாநகராட்சி நிறுத்தி உள்ளது. விலையில்லா உணவு குறித்த அறிவிப்பு வராததால், கட்டணம் வசூலிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.