கொரோனா தொற்று காரணமாக, ரேஷன் கடைகள் மூலம் வழங்கப்பட்ட இலவச உணவு தானியங்கள் வழங்கும் திட்டம், நவம்பர் மாதத்திற்குப் பிறகு நீட்டிக்கப்படாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

கடந்த 2019-ம் வருடம் டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் நகரில் துவங்கிய கொரோனா வைரஸ் தொற்று, 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியது. விரைவாக கொரோனா தடுப்பூசி கண்டுப்பிடிக்கப்பட்டு பொது மக்களுக்கு செலுத்திவரும் நிலையிலும், இதுவரை கொரோனா தொற்று முடிவுக்கு வரவில்லை.

கடந்த வருடம் கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது, உலக நாடுகள் பலவும் பொதுமுடக்கத்தை அறிவித்தன. இதனால் உலக மக்கள் விழிபிதுங்கி போனார்கள். இந்தியாவையும் கொரோனா தொற்று விட்டுவைக்காததால், நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 24-ம் தேதி நள்ளிரவு முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதனால் மக்கள் வேலை வாய்ப்பின்றி தவித்தனர். அன்றாட தேவைகளுக்கு மக்கள் அவதிப்படும் நிலை உருவானது. இதையடுத்து, மார்ச் 26-ம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பிரதமரின் தேசிய உணவு பாதுகாப்பு திட்டமான, கரீப் கல்யாண் திட்டத்தின் கீழ் 1 லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரண திட்டத்தை அறிவித்தார்.

அதன்படி, "பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா" திட்டத்தின் கீழ், நாடு முழுவதும் அடையாளம் காணப்பட்ட 80 கோடி ஏழை குடும்பங்களை சேர்ந்த மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது.

மானிய விலை உணவு தானியத்துக்குமேல், ஒவ்வொருவருக்கும் கூடுதலாக 5 கிலோ உணவு தானியம் இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசால் கூறப்பட்டது. கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் ஜுன் வரை மட்டும் இலவச உணவு தானியம் வழங்குவதாக அறிவிக்கப்பட்ட இத்திட்டமானது, கொரோனா பரவல் முடிவடையாமல் 2-வது அலை துவங்கியதால், "பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா" திட்டம் தொடர்ந்து நீட்டிக்கப்பட்டே வந்தது. இந்நிலையில், இலவச உணவு தானியங்கள் வழங்கும் பணி நவம்பர் 30-ம் தேதியுடன் முடிவடைகிறது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘நாடு முழுதும் 80 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மானிய விலையில் வழங்கப்படும் உணவுப் பொருட்களுடன், கூடுதலாக இலவச அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது. தற்போது கொரோனா பாதிப்பில் இருந்து நாட்டின் பொருளாதாரம் மீண்டு வருகிறது. வெளி சந்தையில் உணவுப் பொருட்கள் விற்பனையும் நன்றாக உள்ளது. எனவே, “பிரதமர் கரீப் கல்யாண் யோஜனா” திட்டத்தின் கீழ் இலவச உணவுப் பொருட்கள் வழங்குவதை, நவம்பவர் 30-க்கு பிறகும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை’ என்றார்.

இந்திய பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து வருவதாலும், வெளிச் சந்தையில் உணவு தானியங்கள் விற்பனை அதிகரித்துள்ளதாலும், கொரோனா காலத்தில் அறிவிக்கப்பட்ட இலவச அரிசி அல்லது கோதுமை திட்டம், வரும் 30-ம் தேதிக்கு மேல் நீட்டிக்கப்படாது என்ற உத்தரவு ஏழை மக்களுக்கு ஏமாற்றத்தை தந்து வருகிறது. அதேசமயம், இந்த ஒன்றரை வருட காலமாகவே, இலவச அரிசி அல்லது இலவச கோதுமை வழங்கியது, மக்களுக்கு மிகப்பெரிய அளவில் வாழ்வாதாரமாக அமைந்து வருவதை மறுக்க முடியாது.

மேலும், ‘பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளதால், போக்குவரத்துக்கான செலவு குறைந்து சமையல எண்ணெய் விலை மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக’ மத்திய உணவுப் பொருட்கள் துறை செயலர் சுதான்ஷு பாண்டே தெரித்துள்ளார்.