இந்தியாவில் பெரும் பணக்காரர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஒரே ஆண்டில் 11 சதவீதம் அளவிற்கு உயர்ந்து உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

“இங்கு, ஏழைகள் மேலும் ஏழைகள் ஆவதும், செல்வந்தர்கள் மேலும் செல்வந்தர்கள் ஆவதும் இந்தியாவின் அவலம்” என்கிற ஒரு சொல்லாடல் உண்டு. அது தான், தற்போது மீண்டும் நிரூபணம் ஆகியிருக்கிறது.

அதாவது, “இந்தியாவில் வருமான ஏற்றத் தாழ்வு தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்றும், இந்தியாவில் உள்ள ஒரு சதவீத பணக்காரர்களிடம் 58 சதவீத மக்களின் சொத்து குவிந்து உள்ளது என்றும், இதனை சர்வதேச அளவுடன் ஒப்பிடுகையில் 50 சதவீதம் அதிகம்” என்றும், கடந்த ஆண்டு ஆக்ஸ்பாம் ஆய்வறிக்கை கூறியிருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் கொரோனாவிற்கு பின், ஒட்டுமொத்த சூழலே முற்றிலுமாக மாறியிருக்கிறது.

கொரோனாவினால் அதிக பாதிப்புக்குள்ளான கடந்த 2020 ஆம் ஆண்டில் மட்டும், “இந்தியாவில் 40 பேர், 7,300 கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து கொண்ட, பில்லியனர்ஸ் பட்டியலில் புதிதாக இணைந்திருப்பதாக அப்போது செய்திகள் வெளியானது.

அந்த வகையில், இந்தியாவில் முகேஷ் அம்பானி தொடர்ந்து முதல் பணக்காரராக இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு, கடந்த (2020) ஆண்டில் மட்டும், 24 சதவீதம் அதிகரித்து உள்ளது என்று, கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, கவுதம் அதானியின் சொத்து மதிப்பு, கடந்த (2020) ஆண்டில் கிட்டத்தட்ட, இரு மடங்காக அதிகரித்து உள்ளது என்றும், இதனால் இவர் இந்தியாவின் 2 வது பெரும் பணக்காரராக உள்ளார், என்கிற செய்தியும் கடந்த ஆண்டு மார்ச் மாத புள்ளி விவரங்களில் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி, கவுதம் அதானியின் சகோதரர் வினோத்தின் சொத்து மதிப்பு, 128 சதவீதம் அளவுக்கு அதிகரித்து, 71, 540 கோடி ரூபாயாக உயர்ந்து என்றும், கூறப்பட்டது.

அதன் தொடர்ச்சியாக, “இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரித்து உள்ளது என்றும், கொரோனா காலத்திலும் அவர்களுக்கு லாபம் கிடைத்து உள்ளது” என்றும், ஆக்ஸ்பாம் இந்தியா அமைப்பு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி வெளியிட்ட ஆய்வறிக்கையில் கூறியிருந்தது.

அந்த ஆய்வறிக்கையில், “இந்தியாவில் கோடீஸ்வரர்களின் எண்ணிக்கை 39 சதவீதம் உயர்ந்து, தற்போது 142 ஆக அதிகரித்து உள்ளது என்றும், பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை தற்போது 142 பேர் உள்ளனர்” என்றும், அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

“இதில் முதல் 10 பெரும் பணக்காரர்களின் மொத்த சொத்துகளை வைத்தே, இந்தியாவில் அடுத்த 25 ஆண்டுகளுக்கு பள்ளி மற்றும் உயர் கல்வி வசதியை அளிக்க முடியும் என்றும், கொரோனா காலத்திலும் இந்த பெரும் கோடீஸ்வரர்கள் வருவாய் 2 மடங்குக்கிற்கு மேல் உயர்ந்து உள்ளது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பாக நைட் பிராங்க் என்கிற சொத்து ஆலோசனை நிறுவனமானது, உலக அளவிலான சொத்து விவர அறிக்கையை தயாரித்து வெளியிட்டு உள்ளது.

அதன்படி, “3 கோடி டாலர் (ரூபாய் மதிப்பில் 226 கோடி) மற்றும் அதற்கு மேல் நிகர சொத்து மதிப்பு கொண்ட தனி நபர்களை பெரும் பணக்காரர்களாக இந்த முறை பட்டியலில் சேர்த்து உள்ளனர்.

அந்த பட்டியலின் படி, “இவர்களின் எண்ணிக்கையானது, கடந்த 2020 ஆம் ஆண்டு உலக அளவில் 5 லட்சத்து 58 ஆயிரத்து 828 ஆக இருந்த நிலையில், கடந்த ஆண்டு 6 லட்சத்து 10 ஆயிரத்து 569 ஆக உயர்ந்து உள்ளது” என்று, சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

அதாவது, “9.3 சதவீதமாக இது அதிகரித்து உள்ளது” என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

அந்த வகையில், “இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டு 12 ஆயிரத்து 287 ஆக இருந்த பணக்காரர்களின் எண்ணிக்கையானது, கடந்த ஆண்டு 13 ஆயிரத்து 637 ஆக அதிகரித்தது உள்ளது என்றும், இது ஒரே ஆண்டில் 11 சதவீதம் உயர்ந்து உள்ளது” என்றும், அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

“இந்தியாவில், பெங்களூருவில் தான் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிக பட்சமாக உள்ளது என்றும், அங்கு 17.1 சதவீதம் பெரும் பணக்காரர்களாக உயர்ந்து உள்ளனர்” என்றும், கூறப்பட்டு உள்ளது.

அத்துடன், “பெங்களூருவை பொறுத்தவரையில் அங்கு 352 பெரும் பணக்காரர்கள் உள்ளனர் என்றும், டெல்லி, மும்பை ஆகியவை இதற்கு அடுத்தடுத்த இடங்களில் உள்ளதாகவும்” அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டு உள்ளது.

மேலும், “பங்குச் சந்தையின் வளர்ச்சியும், டிஜிட்டல் புரட்சியும் தான் இந்தியாவில் பெரும் பணக்காரர்கள் எண்ணிக்கை அதிகரிக்க முக்கிய காரணங்கள்” என்று, நைட் பிராங்க் நிறுவனம் தனது அறிக்கையில் கூறியுள்ளது.

முக்கயமாக, “இந்த பணக்காரர்களின் எண்ணிக்கையானது, அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டுக்குள் இந்த பணக்காரர்கள் எண்ணிக்கை 39 சதவீதம் அதிகரிக்கும்” என்றும், அந்த நிறுவனம் கணித்து உள்ளது. அதே நேரத்தில், இந்த அறிக்கையில் இந்தியாவில் உள்ள ஏழைகள் பற்றிய எந்த அறிவிப்பும் இடம் பெறவில்லை.

இதனிடையே, “உலக அளவில் பெரும் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கையில், அமெரிக்கா 748 பெரும் பணக்காரர்களுடன் முதல் இடத்தில் இருக்கிறது என்றும், அதற்கு அடுத்தப்படியாக சீனா 554 பேருடன் 2 ஆம் இடத்திலும் உள்ளது என்றும், இந்தியா 145 பேருடன் 3 ஆம் இடத்திலும் உள்ளது” என்றும், நைட் பிராங்க் நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.