குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் தந்தையைப் பறி கொடுத்த பிரிகேடியர் லிட்டரின் மகள் ஆஸ்னா தனது தந்தை ஒரு ஹீரோ என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டேரி மலைப்பகுதியில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் நேற்று முன்தினம் பிற்பகல் பனிமூட்டம் காரணமாக மரத்தில் மோதி கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் 11 ராணுவ அதிகாரிகளும் உயிரிழந்தனர். இந்த விபத்தில் குரூப் கேப்டன் வருண் சிங் மட்டுமே உயிர் தப்பினார். அவருக்கு பெங்களூரு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வெலிங்டனில் நேற்று அஞ்சலி செலுத்தப்பட்டது. அதனைத்தொடர்ந்து உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் உடல்கள் நேற்று டெல்லி கொண்டு செல்லப்பட்டது.

அங்கு அவர்களின் உடல்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மலர்வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதைச் செலுத்தினார். அவரைத்தொடர்ந்து பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், பாதுகாப்புத்துறை இணையமைச்சர் அஜய் பட், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் உள்ளிட்டோரும் உயிரிழந்தவர்களின் உடல்களுக்கு மரியாதைச் செலுத்தினர்.

மேலும் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ராணுவ அதிகாரிகளின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர். இந்த விபத்தில் பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் பிரிகேடியர் லிட்டர் (52) ஆகிய 3 பேரின் உடல்கள் மட்டுமே அடையாளம் காணமுடிந்தது.

ஹெலிகாப்டர் மரத்தில் மோதிய வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்த எரிந்ததால் மற்ற ராணுவ அதிகாரிகளின் உடல்கள் அடையாளம் காணமுடியவில்லை.

இந்நிலையில் விபத்தில் உயிரிழந்த பிரிகேடியர் லிட்டரின் உடலுக்கு டெல்லி கண்டோன்மென்ட்டில் உள்ள ப்ரார் சதுக்கத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், முப்படைகளின் தளபதிகள் ஆகியோர் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தினர்.

மேலும் இராணுவ உயரதிகாரிகள் பிரிகேடியர் லிட்டருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. அதன்பின்னர் லிட்டரின் உடல் ராணுவ மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது.

மறைந்த `எல்.எஸ்.லிட்டர்’ என்றழைக்கப்படும் பிரிகேடியர் லக்பிந்தர் சிங் லிட்டர் அரியானா மாநிலம் பஞ்ச்குலா பகுதியைச் சேர்ந்தவர். இவர் மறைந்த பிபின் ராவத்தின் பாதுகாப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார்.

டெல்லியிலிருக்கும் தேசிய பாதுகாப்புப் படைக் கல்லூரியில் ராணுவப் பயிற்சி பெற்ற இவர், இமாச்சலப்பிரதேச மாநிலத்தில் எல்லைப் பாதுகாப்புப் பணியில் பொறுப்பு வகித்தார்.

பின்னர் கஜகஸ்தான் நாட்டில் இந்தியாவின் பாதுகாப்பு இணைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். ராணுவ விவகாரங்கள் குறித்துப் பல ஆய்வுக் கட்டுரைகளையும் எழுதியிருக்கிறார். இவருக்கு கீதிகா லிட்டர் என்ற மனைவியும், ஆஸ்னா என்ற 16 வயது மகளும் உள்ளனர்.

பிரிகேடியர் எல்.எஸ். லிட்டரின் மகள் ஆஸ்னா தனது தந்தை ஒரு வீரன், எனது நல்ல நண்பன் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

லிட்டரின் உடல் அடங்கிய சவப்பெட்டியைப் பார்த்து அவரது மனைவி மற்றும் மகள் இருவரும் கதறி அழுதனர். ஆனால் இருவருமே மன உறுதியுடன் காணப்பட்டனர்.

தனது கணவரின் மறைவு குறித்து கீதிகா லிட்டர் கூறும் போது, "நாம் அவருக்கு நல்லமுறையில் பிரியாவிடை அளிக்க வேண்டும்... புன்னகையுடன் வழியனுப்ப வேண்டும்... நான் ஒரு ராணுவ வீரரின் மனைவி. இது எங்களுக்கு பெரிய இழப்பு” என்று மன உறுதியுடன் கூறினார்.

அதேபோல அவரது மகள் ஆஸ்னாவும் தனது தந்தையின் மறைவால் அதிர்ச்சியில் மூழ்கியிருந்தாலும் கூட நிலை குலையாமல், மன உறுதியுடன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவர், “எனது தந்தை எனக்கு நல்ல நண்பராக இருந்தார். அவர் ஒரு வீரர். அவர் ஒரு ஹீரோ. அவர் சீக்கிரம் போய் விட்டார். எங்களுக்கு நல்லது நடக்க அவர் ஆசி புரிவார். எனக்கு நல்ல ஊக்க சக்தியாக திகழ்ந்தவர் எனது தந்தை.

எனக்கு 17 வயதாகப் போகிறது. இத்தனை வருடங்கள் என்னுடன் அவர் இருந்துள்ளார். அவர் என்னிடம் விட்டுச் சென்ற மகிழ்ச்சியான நினைவுகளுடன் வாழ்வேன். இந்த இனிய நினைவுகளுடன் எங்கள் குடும்பம் முன்னே செல்வோம். அவரது மரணம் தேசிய இழப்பு” என்று கூறினார்.

தனது பேட்டியின்போது அழுகையை வெளிப்படுத்தாமல், மிகுந்த மன உறுதியோடு அவர் பேசியது அனைவரையும் நெகிழ வைத்து விட்டது. விரைவிலேயே எல்.எஸ்.லிட்டர் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெறவிருந்தார்.

ஆனால் சீக்கிரமே ஓய்வு பெற வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருப்பாராம் லிட்டர். ஜெனரல் பிபின் ராவத்தான் அவரை, கொஞ்சம் பொறுங்கள். நாம் இருவரும் சேர்ந்தே ஓய்வு பெறலாம் என்று கூறி வந்தாராம். ஆனால் இருவரும் ஒன்றாக இன்று மரணத்தைச் சந்தித்திருப்பது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.