சென்னையில் பள்ளி வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் தொடர்பாக வாகன ஓட்டுனரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் வெற்றிவேல். இவர் பெங்களூரூவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். வெற்றிவேலின் மகன் சென்னை ஆழ்வார் திருநகரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். தினமும் பள்ளி வேனிலேயே சென்று வருவது வழக்கம். அதே போல இன்று காலை பள்ளிக்குச் சென்ற மாணவன், பள்ளி வளாகத்திலேயே வேன் மோதியதில் உயிரிழந்ததாகக் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக வேன் ஓட்டுநர் பூங்காவனம் கைது செய்யப்பட்டுள்ளார். அதோடு, விபத்து நடந்த வேனும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து நடைபெற்ற விசாரணையில், பள்ளி வளாகத்தில் மாணவர் இறக்கிவிடப்பட்டுள்ளார். இறங்கிச் சென்ற மாணவன் மீண்டும் வேனுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது வேன் பின்னோக்கி வந்துகொண்டிருந்ததால், மாணவன் மீது மோதியுள்ளது. விபத்தில் சிக்கிய மாணவனை வடபழனியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவமனையில் மாணவரைப் பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளார். தற்போது மாணவரின் உடல் பிரேதப் பரிசோதனை செய்வதற்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. விபத்து எப்படி நடந்தது என்பது தொடர்பாகப் பள்ளி நிர்வாகம் சார்பில் எந்த உரிய விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று மாணவரின் உறவினர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு விசரணையில் பள்ளி தாளாளர் ஜெயா சுபாஷ் முதல்வர் தனலட்சுமி, வாகன பாதுகாவலர் ஞானசக்தி மீது வழக்குப்பதிவு செய்து மேலும் இந்த விபத்து தொடர்பாக வளசரவாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

மேலும் பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனத்தில் உதவியாளர் ஒருவர் இருக்கவேண்டும் என்பது விதிமுறை. அந்த விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்பட்டதா என்பது எல்லாம் விசாரணை முடிவில் தான் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. காலையில் பள்ளிக்குச் சென்ற மாணவன் பள்ளி வளாகத்திலேயே வேன் மோதி உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.