“தற்கொலை எண்ணம் உள்ளவர்களே என்னிடம் வாருங்கள்” என்று, விளம்பரப்படுத்தி 9 பேரை கொலை செய்த கொடூர கொலை காரனை போலீசார் கைது செய்துள்ளனர். 

ஜப்பான் நாட்டில் தான், இப்படி ஒரு கொடூரம் அரங்கேறி இருக்கிறது.

ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ நகரின் அருகில் உள்ள சாமா என்னும் பகுதியைச் சேர்ந்த 30 வயதான தகாஹிரோ ஷிரைசி, வாழ்க்கையில் மிகவும் விரக்தியடைந்து கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி “தற்கொலை எண்ணம் பற்றி” தனது டிவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்து இருந்தார். 

அவர் பதிவு செய்துள்ள கருத்தில், “எனது பதிவில் கருத்து கூறுபவர்களைத் தேர்ந்தெடுத்து, நானும் அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ளத் தயார்” என்று, பதிவிட்டு இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்படியாக, சிலரிடம் சாட்டிங் செய்து, பலரையும் தன்னுடன் நட்பாக்கி கொள்வதாக இருந்துள்ளார்.

அத்துடன், தற்கொலை எண்ணம் உள்ளவர்களை தன் வீட்டுக்கு அழைக்கும் தகாஹிரோ ஷிரைசி, அவர்களுடன் பேசி தீர்த்த பிறகு, அவர்களை கொலை செய்து, அவர்களின் தலை மற்றும் உடல் உறுப்புகளைத் தனித்தனியாக வெட்டி குளிர்சாதனப் பெட்டிகளில் வைத்து விட்டு வந்திருக்கிறார். 

இப்படியாக, சுமார் “15  வயது முதல் 26 வயதுடைய 8 பெண்கள் உள்ளிட்ட மொத்தம் 9 பேரிடம் நட்பாக பழகி, அவர்களை நம்ப வைத்து கொலை செய்து, அவர்களது உடலை துண்டு துண்டாக வெட்டி உள்ளார்” என்பது தெரிய வந்துள்ளது.

அதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒருவர் தனது தங்கையின் டிவிட்டர் கணக்கை ஆய்வு செய்யும் போது, ஒருவரின் டிவிட்டர் அழைப்பை பார்த்து அதிர்ந்து உள்ளார்.

அதில், “தற்கொலை செய்ய வேண்டுமா? என்னிடம் வாருங்கள். தற்கொலை குறித்து சிரமப்படுபவர்களுக்கு உதவ விரும்புகிறேன். எனக்கு தனி மெசேஜ் அனுப்புங்கள்” என்று, அந்த அழைப்பு இருந்துள்ளது. 

இதனைப் பார்த்து கடும் அதிர்ச்சியடைந்த அந்த நபர், உடனடியாக அந்த பகுதியில் உள்ள போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்து உள்ளார். இது குறித்து போலீசார் மெசேஜ் அனுப்பிய தகாஹிரோ ஷிரைசியின் வீட்டை கண்டு பிடித்து சோதனை செய்தனர். அதன் படி, அந்த வீட்டில் சில மனித உடல் உறுப்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். அதன் பிறகே, மற்ற தலைகள் மற்றும் உடல் உறுப்புகளை போலீசார் கண்டுபிடித்தனர். 

இதனையடுத்து, அவனை தேடி கண்டுப்பிடித்த போலீசார், அவனை அதிரடியாகக் கைது செய்தனர். இதனையடுத்து அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். 

அப்போது, 9 பேரை கொலை செய்ததை ஷிரைசி ஒப்புக் கொண்டார். இதனால், அவருக்கு அதிகபட்சமாக மரண தண்டனை வழங்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் வாதிட்டார்.

இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, “கொலை செய்யப்பட்டவர்கள் அனைவரும் தங்களை கொலை செய்ய சம்மதம் தெரிவிக்கவில்லை என்பது, விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும், இதனால் ஷிரைசிக்கு மரண தண்டனை விதிப்பதாகவும்” உத்தரவு பிறப்பித்தார்.

இதனால், அந்நாட்டு மக்கள் ஷிரைசியை “டிவிட்டர் கொலைகாரன்” என்று அழைக்கத் தொடங்கி உள்ளனர். இந்த சம்பவத்தால், அந்நாட்டு மக்கள் கடும் பீதியடைந்துள்ளனர்.