கொரோனா வைரஸ் பிரச்சனையால் ஜிம்கள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. லாக்டவுன் நாட்கள் கழித்து சமீபத்தில் சென்னையில் உடற்பயிற்சி கூடங்கள் திறக்கப்பட்டது. ஜிம் திறந்த உடன் நடிகர் ஆர்யா ஒர்க்அவுட் செய்ய துவங்கிவிட்டார். சில நாட்கள் முன்பு ஆர்யா தன் நண்பர் விஷாலுடன் இணைந்து பாக்ஸிங் செய்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் ஆர்யா தனது மனைவியான நடிகை சயீஷாவுடன் பாக்ஸிங் செய்யும் புகைப்படம் இணையத்தில் ட்ரெண்ட்டாகி வருகிறது. 

நடிகர் ஆர்யாவுக்கு கடந்த ஆண்டு வெளியான காப்பான் மற்றும் மகாமுனி திரைப்படங்கள் வெளியாகியது. இந்த இரண்டு படங்களிலும் தனது அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆர்யா. தற்போது ஆர்யா நடிப்பில் உருவாகி ரிலீஸுக்கு ரெடியாக இருக்கும் படம் டெடி. ஸ்டுடியோ கிரீன் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ளார். இமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.  யுவா இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். 

ஆர்யாவுக்கு ஜோடியாக இந்த படத்தில் சாயிஷா நடித்துள்ளார். திருமணத்திற்கு பிறகு ஆர்யா மற்றும் சயீஷா இருவரும் ஒன்று சேர்ந்து நடிக்கும் படம் என்பதால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கடைசியாக காப்பான் படத்தில் இருவரும் சேர்ந்து நடித்திருந்தனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகளும் முடிவடைந்தது.

இப்படியிருக்க சயீஷாவுடன் ஜிம்மில் பாக்ஸிங் செய்யும் புகைப்படத்தை பதிவு செய்து, புதிய ஜிம் பார்ட்னர் என்று டேக் செய்துள்ளார். இதில் ஆர்யாவின் நண்பரும், நடிகருமான விஷ்ணு விஷால் கமெண்ட் செய்துள்ளார். இனிமே கேர்ஃபுல்லா இருங்க பார்ட்னர், சயீஷா அடிச்சிட போறாங்க என்று ஜாலியாக கமெண்ட் செய்துள்ளார். 

சைக்கிளிங் தொடர்ந்து பாக்ஸிங்கில் ஆர்யா ஈடுபடுவதை அடிக்கடி காண முடிகிறது. பா ரஞ்சித் இயக்கத்தில் உருவாகிவரும் சல்பேட்டா படத்தில் பாக்ஸராக நடிக்கிறார் ஆர்யா. வடசென்னை பகுதியில் பாக்ஸிங் விளையாட்டு சம்பந்தப்பட்ட கதை என்று கூறப்படுகிறது. இந்த படத்தில் கலையரசன், தினேஷ், துஷாரா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கவுள்ளனர். சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். 

இதுதவிர்த்து சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகிவரும் அரண்மனை 3 படத்தில் நடிக்கிறார் ஆர்யா. ஹாரர் படமாக உருவாகும் இந்த படத்தில் ஆர்யா பேயாக நடிக்கிறார் என்றெல்லாம் இணையத்தில் செய்தி கிளம்பியது.