எதார்த்தமான நடிப்பால் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துள்ள நடிகர்களில் ஒருவர் வைபவ். தற்போது இவர் நடிப்பில் உருவாகிய திரைப்படம் காட்டேரி. வித்தியாசமான திகில் படமாக தயாராகி வரும் இப்படத்தை ஞானவேல்ராஜா தனது ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். இப்படத்தை டீகே இயக்கியுள்ளார். இவர் இதற்கு முன் ஹாரர் காமெடி படமான யாமிருக்க பயமே படத்தை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. 

வைபவ் உடன் கருணாகரன், வரலக்ஷ்மி சரத்குமார், சோனம் பாஜ்வா, கருணாகரன், ஆத்மிகா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கொடூரமான பெயர் உள்ள பேயைத்தான் கிராமப்பகுதிகளில் காட்டேரி என சொல்வதுண்டு அந்த அடிப்படையில் இப்படமும் பயங்கர த்ரில்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

ஏப்ரல் 17-ம் தேதி வெளியாகவிருந்த இந்த படம் கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. அதன் பின் படத்தின் முதல் சிங்கிளான என் பேரு என்ன கேளு பாடல் கடந்த ஜூன் மாதம் வெளியானது. அரண்மனை, காஞ்சனா போன்ற படங்களின் வரிசையில் இந்த படமும் இடம்பெறும் என்ற ஆவலில் உள்ளனர் ஹாரர் பட விரும்பிகள். 

இந்நிலையில் படத்தின் இரண்டாம் ட்ரைலர் காட்சி தற்போது வெளியானது. நடிகர் ஆர்யா இந்த ட்ரைலரை வெளியிட்டார். ட்ரைலர் காட்சிகளை பார்க்கும் போது, மர்மம் நிறைந்த ஊரில் மாட்டுக்கொள்ளும் வெளியூர் நபர்கள் எப்படி அங்கிருந்து தப்பிக்கிறார்கள் என்பதே கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. கப்பல் படத்திற்கு பிறகு வைபவ் உடன் ஜோடி சேர்ந்து நடிக்கிறார் சோனம் பாஜ்வா. 

காட்டேரி படத்தில் முக்கிய ரோலில் நடிகை வரலக்ஷ்மி நடித்துள்ளார். வரலக்ஷ்மி கைவசம் சேஸிங் திரைப்படம் உள்ளது.வீரகுமார் இயக்கிய இந்த படத்தை மதியழகன் முனியாண்டி தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஸ்டண்ட் காட்சிகளில் டூப் ஏதும் இல்லாமல் வரலக்ஷ்மியே நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.