லியோ படத்தில் உடன் நடித்த மன்சூர் அலிகான் தன்னைப் பற்றி அவதூறாக பேசியதற்காக கேட்ட மன்னிப்பு... திரிஷாவின் பதில் இதுதான்! விவரம் உள்ளே

அவதூறாக பேசிய மன்சூர் அலி கானி மன்னிப்புக்கு த்ரிஷா பதில்,trisha reaction to leo actor mansoor ali khan apology for his derogatory comments | Galatta

கடந்த சில வாரங்களுக்கு முன்பு தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்து மெகா ஹிட் பிளாக்பஸ்டரான லியோ திரைப்படத்தில் திரிஷாவுடன் இணைந்து நடித்த நடிகர் மன்சூர் அலிகான் திரிஷாப் பற்றியும் கதாநாயகிகள் பற்றியும் அவதூறாக பேசியதற்காக தற்போது, “எனது சக திரைநாயகி திரிஷாவே என்னை மன்னித்துவிடு! இல்லறமாம் நல்லறத்தில் நின் மாங்கல்யம் தேங்காய் தட்டில் வலம்வரும்போது நான் ஆசிர்வதிக்கும் பாக்யத்தை இறைவன் தந்தருள்வானாக!! ஆமீன்.” என குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார். அப்படி மன்சூர் அலிகான் மன்னிப்பு கேட்டதற்கு நடிகை திரிஷா தற்போது பதில் அளித்திருக்கிறார். அது குறித்து தனது X பக்கத்தில், “தவறு செய்வது மனிதம், மன்னிப்பது தெய்வீகம்” என திரிஷா பதிவிட்டு இருக்கிறார், நடிகை திரிஷாவின் அந்த பதிவு இதோ…

 

To err is human,to forgive is divine🙏🏻

— Trish (@trishtrashers) November 24, 2023

சமீபத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பு ஒன்றில் பேசிய நடிகர் மன்சூர் அலிகான் நடிகை திரிஷாவுடன் லியோ திரைப்படத்தில் பணியாற்றியது பற்றி பேசும்போது மிகவும் மோசமான முறையில் கதாநாயகிகள், படுக்கை அறை காட்சிகள், பலாத்கார காட்சிகள் பற்றி பேசியது, ஒட்டு மொத்த தமிழ் சினிமா ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியில் பெரும் கோபத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. நடிகை திரிஷா மற்றும் தமிழ் சினிமாவின் மூத்த நடிகைகள் குறித்து மிகவும் அவதூறாக பேசியது மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடனடியாக அது குறித்து நடிகை திரிஷா தனது சமூக வலைதள பக்கங்களில் இந்த விஷயத்தை குறிப்பிட்டு, “சமீபத்தில் நடிகர் மன்சூர் அலிகான் என்னைப் பற்றி அருவருக்கத்தக்க வகையில் பேசிய வீடியோவைப் பார்த்தேன். அவரது பேச்சை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.. அந்த பேச்சு ஆணாதிக்க மனநிலையிலும், மரியாதைக் குறைவானதாகவும், பாலின பாகுபாட்டைப் பிரதிபலிக்கக் கூடிய மோசமான ஒன்றாகவும் இருந்தது. என்னுடன் நடிக்க வேண்டும் என அவர் தொடர்ந்து ஆசைப்படட்டும். ஆனால், இத்தகைய கேவலமான மனிதருடன் இணைந்து நடிக்காததை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். என்னுடைய வாழ்நாளில் அவருடன் இணைந்து நடிக்க மாட்டேன் என்பது உறுதி. அவரைப் போன்றவர்களால் ஒட்டுமொத்த மனித சமூகத்துக்கே இழுக்கு!”  என தெரிவித்திருந்தார்.

இதனை அடுத்து இது குறித்து தானாக முன்வந்த தேசிய மகளிர் ஆணையம் நடிகை திரிஷாவுக்கு ஆதரவு குரல் கொடுக்கும் வகையில், இது தொடர்பாக மன்சூர் அலிகான் மீது ஐபிசி பிரிவு 509 மற்றும் அது சம்பந்தப்பட்ட பிற பிரிவுகளில் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என காவல்துறையை நாடினர். இது குறித்து தங்களது X பக்கத்தில், “நடிகை த்ரிஷாவை பற்றி நடிகர் மன்சூர் அலிகான் அவதூறாக பேசியது குறித்து தேசிய மகளிர் ஆணையம் கவலை தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் நாங்கள் தானாக முன்வந்து, ஐபிசி பிரிவு 509 பி மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களைப் பயன்படுத்துமாறு டிஜிபிக்கு வேண்டுகோள் விடுகிறோம். இது போன்ற கருத்துக்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை சாதாரணமாக்குகிறது மற்றும் கண்டிக்கப்பட வேண்டும்.”  என தேசிய மகளிர் ஆணையம் தெரிவித்தது. இதனைத் தொடர்ந்து தற்போது நடிகர் மன்சூர் அலிகான் இன்று நவம்பர் 24ஆம் தேதி இந்த பிரச்சனை தொடர்பாக தனது வருத்தத்தை தெரிவித்து நடிகை திரிஷாவை குறிப்பிட்டு மன்னிப்பு கேட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.