"ஹுக்கும்"க்கு பதிலடி தான் BADASS பாடலா..!- தளபதி விஜயின் லியோ பட பாடலாசிரியர் விஷ்ணு எடவனின் பதில் என்ன? வீடியோ இதோ

ஹுக்கும் BADASS பாடல்கள் குறித்து பேசிய லியோ பட பாடலாசிரியர்,thalapathy vijay in leo movie lyricist vishnu edavan about hukum and badass | Galatta

மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி இருக்கும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் - தளபதி விஜய் கூட்டணியின் லியோ திரைப்படம் வருகிற அக்டோபர் 19ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் மிகவும் பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆகிறது. அதற்கான அனைத்து ரிலீஸ் பணிகளிலும் படக்குழுவினர் முழு வீச்சில் செயல்பட்டு வருகின்றனர். இது ஒரு புறம் இருக்க சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளிவந்த ஜெயிலர் படத்தில் இடம் பெற்ற ஹுக்கும் பாடலுக்கு பதிலடியாக தளபதி விஜய் நடிப்பில் வெளிவர இருக்கும் லியோ படத்தில் இருந்து 2வது பாடலாக கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளிவந்த BADASS பாடல் வந்திருப்பதாக சோசியல் மீடியாவில் ரசிகர்கள் இடையே அங்கங்கே விவாதங்கள் நடைபெறுவதை பார்க்க முடிகிறது

முன்னதாக கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வெளிவந்து மிகப்பெரிய வெற்றி பெற்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெயிலர் திரைப்படத்தில் இடம்பெற்ற ஹுக்கும் பாடல் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த பாடலின் வரிகளும் வேற லெவல் ட்ரெண்ட் ஆனது. சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பலவித விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில் வெளிவந்த இந்த ஹுக்கும் பாடல் வரிகள் தளபதி விஜயை குறிப்பிடும் வகையில் இருப்பதாகவும் தளபதி விஜய் ரசிகர்களை குறிப்பிடும் வகையில் இருப்பதாகவும் சமூக வலைதளங்களில் எக்கச்சக்கமான விவாதங்கள் வெடித்தன. இந்த நிலையில் சமீபத்தில் தளபதி விஜய் படத்திலிருந்து வெளிவந்த BADASS பாடலும் ஹுக்கும் பாடலுக்கு கிடைத்த அதே மாதிரியான வரவேற்பை பெற்றதோடு இதில் இருக்கும் சில வரிகள் ஹுக்கும் பதிலடியாக அமைந்திருப்பதாக மீண்டும் சமூக வலைதளங்களில் விவாதங்கள் வெடிக்கத் தொடங்கின. இந்த நிலையில் நமது கலாட்டா தமிழ் சேனலுக்கு பிரத்யேக பேட்டி கொடுத்த லியோ திரைப்படத்தின் பாடலாசிரியர் விஷ்ணு எடவனிடம் இது தொடர்பாக கேட்டபோது,

“அப்படியெல்லாம் கிடையாதுங்க அதுவும் அனிருத் பாட்டு தான் இதுவும் அனிருத் பாட்டு தான். பெரிய விஷயங்கள் எல்லாம் இல்லை. அது அந்த ஹீரோவுக்கு எழுதினார்கள் இது இந்த ஹீரோவுக்கு எழுதி இருக்கிறார்கள். இது அந்த படத்துடைய ஹீரோவுக்கும் இந்த படத்துடைய ஹீரோவுக்கும் தான். ரஜினி சார் விஜய் சார் என்று இல்லை. இது ரசிகர்களாக எடுத்துக் கொள்வது தானே.. ஹுக்கும் பாடலில் அது வந்ததால் அந்த கதை சூப்பராக தூக்கப்பட்டதா? பயங்கரமாக இருந்ததா? ஏனென்றால் அது அந்த ஹீரோவுக்கு தேவைப்பட்டது. "ஹுக்கும் டைகர் கா ஹுக்கும்" என்று அவர் சொல்கிறார் என்றால் 25 வருடங்களுக்கு முன்பு அவர் அதை தான் செய்திருக்கிறார். அதனால் அங்கு அது தேவைப்படுகிறது. அதே மாதிரி இங்கே "வத்திக்குச்சி இல்ல எரிமலை மவனே" என்கிற வரி வருவது எதற்காக என்றால் போஸ்டரில் இருந்தே ஒன்றை சொல்லிக் கொண்டிருக்கிறோம் நெருப்பு ஒருபுறம் பனிக்கட்டி ஒருபுறம் என்ற ஐடியாவில் போய்க் கொண்டிருக்கிறது. அதனால் நெருப்பை இங்கே சேர்த்து வைத்துக் கொண்டு வந்திருக்கிறோம். அதேபோல் “குலசாமியை வேண்டிக்க மாமே” என்ற வரியும் படம் பார்க்கும்போது புரியும்” என பதில் அளித்துள்ளார். இன்னும் பல சுவாரசிய தகவல்களை நம்மோடு பகிர்ந்து கொண்ட பாடலாசிரியர் விஷ்ணு எடவனின் அந்த முழு பேட்டியை கீழே உள்ள லிங்கில் காணலாம்.