“என் பள்ளியில் ஒவ்வொரு ஆண்டும் புதிது புதிதாகச் சேரும் மழலைச் செல்வங்களே எனக்கான விருதுகள். பள்ளி வளாகத்தில், என் விரல் பற்றி நடக்கும் ஒவ்வொரு சுட்டிகளுமே எனக்குக் கிடைத்த விருதுகள். அதனால், விருதுகள் பற்றி நான் கவலைப்படுவதுமில்லை, விருதுகளுக்காக நான் எதுவும், எப்போதும் செய்வதுமில்லை” என்கிறார் அரசுப் பள்ளி ஆசிரியர் மார்கிரேட்.

Margaret teacher

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகா, வாட்டாத்திக்கோட்டை கிராமத்தில் 5ஆம் வகுப்பு வரை உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருக்கும் மார்கிரேட், வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்து வருகிறார். ஆண்டு தோறும் ஜீன் மாதம் பள்ளித் தொடங்குகிறது என்றால், இவருக்கு இதுதான் தலையாய பணி. “சிறந்த ஆசிரியருக்கான விருதை நீங்கள் பெற்றிருக்கிறீர்களா?, டீச்சர் பணியை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்?, அதென்ன 'மாகி டீச்சர்?' ” என்று நாம் முன்வைத்த கேள்விகளுக்குத் தான், மழலை குழந்தைகளுக்கே பதில் சொல்லும் தோணியில், நம்மிடமும் உரையாடுகிறார் ஆசிரியர் மார்கிரேட்.

Margaret teacher

“மாதா, பிதா, குரு, தெய்வம் எனத் தெய்வத்திற்கும் மேலோக பார்க்கப்பட்டு வரும் ஆசிரியர் சமுதாயம் தான்.. இன்று போராட்டங்களினாலும், அலைக்கழிப்புகளினாலும் அல்லல் பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால், இதில், எனக்குத் துளியும் உடன்பாடு இல்லை. என்னுடைய வாழ்வில் ஆசிரியர் பணியைப் புனிதமாகப் பார்க்கிறேன். பிற ஆசிரியர்களுக்கு முன்மாதிரியாக, ஒரு நல்ல ஆசிரியராக எவ்வளவு தூரம் பயன்பட முடியுமோ, பயணப்பட முடியுமோ.. அவ்வளவு தூரம் எனது இறுதிக் காலம் வரை இப்படியே இருப்பேன்.

Margaret teacher

Margaret teacher

இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாகச் சேர்ந்துள்ளதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். அதன்படி, என் பள்ளியில் கடந்த ஆண்டை விட, இந்தாண்டு 7 மாணவர்கள் கூடுதலாகச் சேர்ந்துள்ளார்கள். இதற்கு முந்தைய ஆண்டை விட, போன வருடம் கூடுதலாக 3 மாணவர்கள் என் பள்ளியில் சேர்ந்தார்கள். இப்படி வருட வருடம், என் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையைத் தொடர்ந்து அதிகரித்து வருகிறேன்” என்று நெஞ்சம் நிமிர்த்திப் பேசுகிறார்.

Margaret teacher

“கடந்த 29 ஆண்டுகளாக நான் ஆசிரியராக இருக்கிறேன். ஆனால், கடந்த 7 ஆண்டுகளாகத் தான், வாட்டாத்திக்கோட்டை ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்து வருகிறேன். நான் பொறுப்பேற்ற அடுத்த ஆண்டு முதல், அரசுப் பள்ளிக்குப் போட்டியாக.. அதே ஊரில் உள்ளூர் நபரால் நடத்தப்படும் தனியார் மெட்ரிக்குளேஷன் பள்ளிக்குப் போட்டியாக, அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வியையும் கொண்டுவந்தேன். பலரும் தங்களது குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்க்க முன்வந்தாலும், நான் ஒரு தலைமை ஆசிரியர் என்றுகூட பாராமல், கிராமத்தில் உள்ள பெரும்பாலானவர்களின் வீடுகளுக்குத் தனி ஆளாக நேரில் சென்று, பெற்றோர்களைச் சந்தித்து, அரசுப் பள்ளியில் உள்ள ஆரோக்கியமான சூழல் குறித்துப் பேசுவேன். பெற்றோர்களின் மனதை எப்படியாவது மாற்றிவிடுவேன். குழந்தைகளிடமும், அவர்களின் மொழியில் பேசி, குழந்தைகளைப் பள்ளிக்கே அழைத்து வந்துவிடுவேன். தனியார்ப் பள்ளியில் உயர்தரமான கல்வியை, தங்கள் குழந்தைகள் படிக்க வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்கள்.. என்னுடைய அணுகுமுறையால், அரசுப் பள்ளியிலேயே தங்களது குழந்தைகளைச் சேர்க்க முன் வந்துவிடுகிறார்கள். இதனால், ஆண்டுதோறும் பள்ளி மாணவர்களின் எண்ணிக்கையை 100 பேருக்குக் குறையாமல் பார்த்துக்கொள்வேன். தற்போது என் பள்ளியில் 109 பார் படிக்கிறார்கள்.

Margaret teacher

பள்ளி மாணவர்களுக்கு, அரசு சலுகைகளை மட்டும் எதிர்பார்க்காமல், சில தனியாரிடமும் உதவி பெற்று, பள்ளிக்குத் தேவையான அனைத்துவிதமான அடிப்படை வசதிகளையும் மேற்கொண்டு வருகிறேன். மாணவர்கள் மத்தியில் திருக்குறளின் பெருமையை உணர்த்தும் விதமாக, உள்ளூர் மக்களின் உதவியோடு, பள்ளி வளாகத்திலேயே திருவள்ளூர் சிலையையும் நிறுவியிருக்கிறேன். மாணவ, மாணவிகள் க்யூஆர் கோடு மூலமாகப் படிக்கும் வகையில் தனியார் உதவியுடன் டிஜிட்டல் புரோஜக்டர் மற்றும் ஆள் உயரப் பெரிய வடிவிலான ஸ்பீக்கர் ஆகியவற்றையும் வாங்கி வைத்திருக்கிறேன்.

Margaret teacher

அரசுப் பள்ளிகளில் புத்தகங்கள் படிப்பதற்காக மாணவர்களுக்கு வாரம்தோறும் ஒரு பாடவேளைகள் ஒதுக்குகிறோம். அதற்காக, பள்ளியில் மினி லைப்ரேரிப் போன்று 100-க் கணக்கான புத்தகங்களை வாங்கி அடுக்கி வைத்திருக்கிறேன். ஒரு மனிதனை அவனுக்கே அடையாளம் காட்டுபவராக இருப்பவர் தான் உண்மையான ஆசிரியர். அதைத் தான், எனது பள்ளியில் நான் நாள்தோறும் செய்து வருகிறேன். மாணவர்களுக்கு பூஸ்டப் கொடுக்கும் வகையில் மாணவர்களுக்குத் தேவையான ஊக்கத்தையும், தன்னம்பிக்கையையும் கொடுத்து; விடாமுயற்சியை அவனுக்கேத் தெரியாமல் அவனுக்குள் விதைக்கிறோம். இதன் மூலம், சமூகத்தில் பெண்களை மதிக்கும் ஒரு பண்பாளர்களாக மாணவர்களை மாற்றி வருகிறோம்.

Margaret teacher

பள்ளியில், வாரம் தோறும் யோகா வகுப்பு எடுக்கிறோம். இந்த பள்ளியில் 5 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் அனைவரும், ஆங்கிலத்தில் வாசிக்கும் பழக்கத்தை கற்றுத் தருகிறேன். மாலையில் 4 மணிக்குப் பள்ளி முடிந்ததும், 3,4,5 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு மாலை 5 மணி வரை சிறப்பு வகுப்புகளும் எடுத்து வருகிறேன். ஏழைப் பிள்ளைகளுக்கு, தனிப்பட்ட முறையிலும் பல்வேறு உதவிகளைச் செய்வதோடு, பெற்றும் தருகிறேன். இதேபோக, 5ஆம் வகுப்பு முடித்து, மற்ற பள்ளியில் 6 ஆம் வகுப்பு சேர முற்படும் ஏழைக் குழந்தைகளுக்கும், 10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் ஏழை மாணவர்களுக்குத் தனிப்பட்ட முறையில், பள்ளி முடிந்து மாலை வேளையில் வகுப்பு எடுப்பதும், அவர்களுக்குத் தேவையான ஆலோசனைகளும், படிப்பு ரீயான தனிப்பட்ட உதவியும் தொடர்ந்து செய்து வருகிறேன். இதனால், நிறைய மாணவர்கள் என்னைச் செல்லமாக 'மாகி டீச்சர்னு' தான் கூப்பிடுவார்கள் என்று நெகிழ்ச்சியோடு பகிர்ந்துகொள்கிறார் மார்கிரேட்.

விளை நிலங்கள் எல்லாம், விலை நிலங்கள் ஆனதுபோல், இலவச கல்வி எல்லாம்.. விலை ஏற்ற கல்விமயமாக மாறிப்போனது. இலவசமாகக் கல்வி கற்ற பின், அதை விற்றுவிட்டோம். ஏழை-பணக்காரனுக்குக் கல்வியிலேயே தரம் பிரித்தாயிற்று. அந்தத் தரம் பிரித்த கல்வி, இன்று கிராமங்களுக்கும் வந்துவிட்டன. இப்படிப்பட்ட கிராமங்கள் தோறும் ஆசிரியர் மார்கிரேட் போன்று ஊருக்கு ஒரு ஆசிரியர் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களை அடையாளம் காட்டுவதும், கொண்டாடுவதும், மேலும் இதுபோன்று ஒரு ஆசிரியரை, இந்தச் சமூகத்தில் புதிதாக உருவாக்கும்.. என்பதாலேயே ஆசிரியர் மார்க்ரேட் போன்றோரை நாம் இந்த ஆசிரியர் தினத்தன்றாவது கொண்டாடுவோம். வாழ்த்துக்கள் டீச்சர்!

Margaret teacher

மாணவர்கள் சிகரத்தை எட்டிப்பிடிக்க உங்கள் கரத்தை இன்னும் உயர்த்திப் பிடியுங்கள். அதை, மாணவர்கள் ஏணியாகப் பயன்படுத்திக்கொள்ளட்டும். புதியதோர் மாணவர் சமூகம் படைக்க வாழ்த்துக்கள் டீச்சர்!

அறப்பணியை அர்ப்பணிப்போடு செய்யும் மார்கிரேட் போன்ற ஆசிரியர்களுக்கு ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்!!

- அருள் வளன் அரசு