நேற்று சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு சூரரைப் போற்று படத்திலிருந்து காட்டு பயலே பாடலை வெளியிட்டனர் படக்குழுவினர். இந்த பாடலின் ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டனர். இந்த ரொமான்டிக் ப்ரோமோ திரை விரும்பிகளை ஈர்த்தது. சுதா கொங்கரா இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த ஆண்டின் பெரிய பட்ஜெட் படங்களில் இதுவும் ஒன்றாகும். 

நடிகை அபர்ணா பாலமுரளி கதாநாயகியாக நடிக்க அவருடன் கருணாஸ், மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். 2D என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. 

ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்துள்ளார். ஜாக்கி ஆர்ட் டைரக்ஷன் செய்துள்ளார். ஓய்வு பெற்ற ராணுவ தளபதி ஏர் டெக்கான் கோபிநாத் வாழ்க்கையை மையப்படுத்தி இப்படம் உருவாகியுள்ளது. இதில் நெடுமாறன் ராஜாங்கம் என்ற பாத்திரத்தில் சூர்யா நடித்துள்ளார். படத்தின் மாறா தீம் பாடல் மற்றும் வெய்யோன் சில்லி பாடல்கள் வெளியாகி சக்கை போடு போட்டது. படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றியுள்ளது. 

படத்திற்கு U சான்றிதழ் வழங்கிய சென்சார் குழுமம், படக்குழுவினரை சமீபத்தில் பாராட்டியது. லாக்டவுன் முடிந்து இயல்பு நிலை திரும்பியவுடன் திரையரங்கில் வெளியாகும் முதல் பெரிய பட்ஜெட் திரைப்படம் இதுவாக தான் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. படத்தின் கதை மற்றும் உருவான விதத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. 

பாடகி தீ பாடிய இந்த பாடல் வரிகளை கவிஞர் சினேகன் எழுதியுள்ளார். பாடல் ப்ரோமோவில் ஹீரோ ஹீரோயின் திருமண காட்சிகளை கொண்டு வடிவமைத்துள்ளனர். நடிகை அபர்ணா பாலமுரளியின் எதார்த்தமான நடிப்பு மற்றும் எக்ஸ்ப்ரெஷன்ஸ் அசத்தலாக அமைந்துள்ளது. கிராமத்து பாணியில் இருக்கும் இந்த காதல் பாடலை ரசித்து வருகின்றனர் சூர்யா ரசிகர்கள். 

தற்போது காட்டுப்பயலே பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளனர். அதில் பாடல் உருவான விதம் பற்றியும் உள்ளது. ஜிவி பிரகாஷ் ஸ்டுடியோவில் இயக்குனர் சுதா கொங்கரா பாடலை கேட்டு ரசிக்கிறார். பாடகி தீ தன் குரலால் ஈர்க்கிறார். ரவுடி பேபி பாடலிலும் தனித்துவத்துடன் பாடியிருப்பார். இந்த மேக்கிங்கில் அபர்ணா நடனத்தை எளிதில் கற்றுக்கொண்டு பின் நடனமாடி கவர்ந்துள்ளார்.