விவசாயிகள் போராட்டம் தொடங்கப்பட்டு இன்றுடன் 11 மாதங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி, இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு விவசாயிகள் சங்கத்தினர் அழைப்பு விடுத்து உள்ளனர்.

பாஜக தலைமையிலான மத்திய அரசு புதிதாகக் கொண்டுவந்துள்ள 3 வேளாண் சட்டங்களுக்கு எதிராக டெல்லி எல்லையில் விவசாயிகள், தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி தொடங்கிய இந்திய விவசாயிகளின் போராட்டம் கிட்டதட்ட 10 மாதங்களை கடந்து, 11 மாதங்கள் ஆகியும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது.

மத்திய அரசுடன் இது வரை பல கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றும், தோல்வியில் முடிந்து போனதால், விவசாயிகளின் போராட்டத்திற்கு மத்திய அரசு துளியும் இறங்கி வரவில்லை என்றே விமர்சிக்கப்பட்டு வருகிறது. எனினும், “தங்களது கோரிக்கைகளை ஏற்கும் வரை போராட்டம் தொடரும்” என்றும், விவசாயச் சங்கங்கள் தெரிவித்து உள்ளன. 

மத்திய அரசின் இந்த விடாப்பிடியான போக்கைக் கண்டித்து, நாடாளுமன்றத்தை நோக்கி விவசாயிகள் பேரணியும் நடத்தினார்கள்.

அத்துடன், 3 புதிய சட்டங்களையும் திரும்பப் பெற வேண்டும் என்பதில் விவசாயிகள் உறுதியாக இருப்பதால் இந்த பிரச்சினையில் தொடர்ந்து முட்டுக்கட்டை நீடித்து வருகிறது. 

முன்னதாக கடந்த 18 ஆம் தேதி கூட “விவசாயிகள் மீது கார் ஏற்றிக்கொள்ளப்பட்ட சம்பவத்தில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ராவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்” என்று, வலியுறுத்தி விவசாயிகள் நாடு முழுவதும் அன்றைய தினம் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன் தொடர்ச்சியாக, தற்போது விவசாயிகள் சங்கமான ‘சம்யுக்த் கிசான் மோர்ச்சா சார்பில் இன்று நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. 

விவசாயிகள் போராட்டம் தொடங்கி 11 மாதங்கள் நிறைவு பெறுவதை ஒட்டி, டேஹ்சில் மற்றும் மாவட்ட தலை நகரங்களில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று கூறப்பட்டு உள்ளது.

அதன் படி, காலை 11 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை இந்த ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. 

இதனால், லக்கிம்பூர் வன்முறையில் மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணை அமைச்சர் அஜய் மிஷ்ரா டேனி, தொடர்புடையவர் என்னும் கருத்தை வலியுறுத்தியும், அவரை கைது செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளதாகவும், விவசாயிகள் தெரிவித்து உள்ளனர்.

இந்த சூழலில் தான், விவசாயிகள் போராட்டத்தின் தீவிர ஆதரவாளரான வெளிநாடு வாழ் இந்தியர் தர்ஷன் சிங் தாலிவால், சிகாகோவில் இருந்து இந்தியாவுக்குள் நுழைய அவர் அனுமதிக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. 

இதற்கு கடும் கண்டனத்தையும் கிசான் மோர்ச்சா சங்கத்தினர் தற்போது தெரிவித்து உள்ளனர். இந்த போராட்டத்தின் முடிவில் எல்லா மாவட்ட ஆட்சியர்கள் மூலமாக இந்திய குடியரசுத் தலைவருக்கு கடிதம் சமர்ப்பிக்கப்படும் என்றும், விவசாயிகள் சங்கத்தினர் தெரிவித்து உள்ளனர். 

மேலும், விவசாயிகள் திட்டமிட்டபடி, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தங்களது போராட்டத்தை தொடங்கி நடத்தி வருகின்றனர்.